அடல் பென்சன் யோஜனா திட்டம் என்பது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக பாதுகாப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் 60 வயதிற்குப் பிறகு நிலையான வருமானத்தைப் பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதில் இந்த அடல் பென்சன் யோஜனா திட்டமும் அடங்கும். இப்போதுவரை இந்த திட்டத்தில் 5 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்து உள்ளனர். கடந்த மே 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். தேசிய ஓய்வூதிய அமைப்பு மூலமாக ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் 18 வயதுள்ள நபர் 60 வயதில் ரூ. 1000 பென்சன் பெற விரும்பினால் மாதம் ரூ. 42 முதலீடு செய்து வர வேண்டும். இதே ஒருவர் 40 வயதில் இந்த திட்டத்தில் சேர்ந்தாரே ஆனால் மாதம் ரூ. 291 முதலீடு செய்ய வேண்டும். இதைத் தவிர மாதம் ரூ. 2000, ரூ. 3000, ரூ. 4000, ரூ. 5000 பெறுவதற்கு தகுந்தாற் போலவும் திட்டங்களை நாம் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
ஏதேனும் காரணத்தினால் சந்தாதாரர் இறந்துவிட்டால், இந்த பென்சன் தொகையை அவரின் வாழ்க்கை துணைக்கு வழங்கப்படும். ஒரு வேலை இரண்டு பெரும் இறந்து விட்டால், சந்தாதாரர் யாரை நாமினியாக சேர்த்திருக்கிறாரோ அவருக்கு அந்த பென்சன் தொகை வழங்கப்படும்.
அடல் பென்சன் யோஜனா திட்டத்தை ஒருவர் தொடங்க விரும்பினால் பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் தொடங்க முடியும். இதற்கு வங்கி கணக்கு, ஆதார் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. இந்தியன் வங்கி ஆகிய வங்கிகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.ஆன்லைன் மூலமாகவும் இந்த திட்டத்தின் கணக்கை நாம் துவங்க முடியும். வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வாயிலாக சந்தாவை செலுத்தும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. அதனால் பெரும்பாலான மக்கள் இத்திட்டத்தை விரும்பி இணைந்து வருகின்றனர்.