தனக்குத் தானே கண்ணதாசன் எழுதிய பாட்டு.. சிவாஜிக்கு ஹிட் ஆன மேஜிக்!

By John A

Published:

கவிஞர்கள்  எப்போதுமே கவிதைகள் புனையும் போது சமூகம், பெண்கள்,  காதல், நாட்டு நடப்பு போன்றவற்றைப் பற்றியே அதிகம் எழுதுவர். ஆனால் இவற்றில் கவியரசர் கண்ணதாசன் சற்று வித்தியாசமானவர். தனக்கு ஏற்படும் ஒரு சூழ்நிலை குறித்து தனக்குத் தானே பாடல் இயற்றி அதை திரைப்படங்களில் புகுத்தி வெற்றி காண்பவர்.

கண்ணதாசனுக்கு இப்படி அமைந்த பாடல்கள் ஏராளம். ஒருமுறை காமராசருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் வெகுநாட்களாகப் பேசாமல் இருந்துள்ளனர். இதற்காக கண்ணதாசன் எழுதிய பாடல்தான், ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.. சேரும்  நாள் பார்த்துச் சொல்லடி..‘ என்ற பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

மேலும் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை, “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..‘ என்ற ரத்தத் திலகம் படத்தில் எழுதியிருப்பார். மேலும் மனிதர்களின் வாழ்வியலையும், உணர்வுகளையும் கடத்தும் பல தத்துவப் பாடல்களை சினிமா உலகிற்குத் தந்து காலத்தால் அழியாத வரம் பெற்றார் கண்ணதாசன்.

காஞ்சி மஹாபெரியவரையே வியக்க வைத்த நடிகர் திலகம்.. அப்படி ஒரு மேக்கப்

அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1972-ல் வெளியான வசூல் சாதனைத் திரைப்படம்  தான் வசந்த மாளிகை. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான ‘இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்‘ என்ற சோகப் பாடலானது சிவாஜி கணேசன் காதல் தோல்வியில் பாடும் பாடலாக படத்தில் அமைந்திருக்கும்.

ஆனால் அந்தப் பாடல் கண்ணதாசன் தனக்காக எழுதியதாம். மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ’ என்ற பாடலையும் அவர் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாராம். இந்தப் பாடல் பொருளாதார ரீதியாக கண்ணதாசன் நலிவுற்ற தருணத்தில் அவருக்கு அவரே இயற்றிய பாடலாகும்.

ஆனால் கவிஞர் அதையும் திரைப்படங்களில் புகுத்தி சாகாவரம் பெற்ற காவியப் பாடல்களாக மாற்றி அற்புதம் நிகழ்த்தினார். மேலும் இதுபோன்று எம்.எஸ்.விஸ்வநாதனுடன் பல தருணங்களில் சண்டையிட்டு பல ஹிட் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

மேலும் அவர் வீடு வங்கிக் கடனால் ஜப்திக்கு வந்த போது விரக்தியின் உச்சகட்டத்தில் எழுதிய பாடல் தான் ‘சிலர் சிரிப்பார்… சிலர் அழுவார்.. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்..‘