இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் செலவில் கிட்டத்தட்ட ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்களக்ஸ் அல்லது கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டாலே ஆயுசு முழுவதும் வருமானம் கொடுக்கும். அந்த அளவிற்கு படத்தின் தயாரிப்புச் செலவு, நடிகர்கள் சம்பளம், விளம்பரம் உள்ளிட்டவைகளில் பணம் தண்ணீராகச் செலழிகிறது.
மேலும் சொன்ன பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகமாகவும் செல்கிறது. படம் வெற்றியடைந்தால் தயாரிப்பாளருக்கு லாபம். இல்லையென்றால் படு நஷ்டமாகி விடுவர். இதனாலலேயே நடிகர்கள் பலர் படத் தயாரிப்பில் ஈடுபடும் முன் நிறைய முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு பின்னர் படங்களைத் தயாரிக்கின்றனர். தோல்வி அடைந்தாலும் அது அவர்களைப் பாதிக்காது.
அந்த வகையில் சினிமாத் தொழிலைப் பொறுத்தவரை தயாரிப்பாளர்களுக்கெல்லாம் குருவாக விளங்கியவர் யாரென்றால் அது தேவர் பிலிம்ஸ் சாண்டே சின்னப்ப தேவர் தான். பட்ஜெட் படங்களாகட்டும், பிரம்மாண்ட படங்களாகட்டும் சொன்ன பட்ஜெட்டைத் தாண்டி ஒரு பைசா கூட செலவழிக்காமல், அதே நேரம் பட பூஜையின் போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து அதன்படி படத்தினை எடுப்பவர்.
கோவை ராமநாதபுரத்தினைச் சொந்த ஊராகக் கொண்ட சின்னப்ப தேவர். சினிமா தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன் நடிகராகவும் இருந்துள்ளார். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள நட்பு அலாதியானது. அவ்வளவு நெருக்கம் இருவருக்கும். முதன் முதலாக தான் சொந்தப் படம் தயாரிக்க விரும்பிய தேவர் எம்.ஜி.ஆரை முதன் முதலாக கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
நண்பனுக்காக உதவிய எம்.ஜி.ஆர்., ஹீரோயினாக யாரைப் ஒப்பந்தம் செய்யலாம் என்ற விவாதம் நடக்கையில் அப்போது எம்.ஜி.ஆருக்கு பானுமதி பொருத்தமாக இருந்தார். ஆனால் பானுமதி அப்போது சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைப்பது அவர் மட்டுமே. அவர் ஒத்துக் கொள்வாரா என்று தேவர் சந்தேகத்தோடு கேட்க, எம்.ஜி.ஆர் பானுமதியிடம் அழைத்துச் சென்று இவர் எனது நண்பர் முதன் முதலாகச் சொந்தப் படம் தயாரிக்க விரும்புகிறார் என்று கூற, பானுமதியோ நீங்கள் நடிக்கிறீர்கள் என்றால் எனக்கும் ஒன்றும் பிரச்சினை இல்லை. தாராளமாக நடிக்கிறேன் என்று சின்னப்ப தேவருக்கு கால்ஷீட் கொடுக்க உருவானது தாய்க்குப் பின் தாரம்.
மேலும் தனது முதல் படத்தினை சொந்த ஊரான கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் ஷுட்டிங் எடுக்க விரும்பிய தேவர் பின் நிர்வாகச் சிக்கல்கள், பண விரயம் போன்றவற்றை எண்ணி சென்னைக்கு வந்தார். சென்னை நந்தனம் பெரியார் மாளிகை அருகே ஓர் அலுவலகம் அமைத்து அங்கே தனது தயாரிப்புப் பணிகளைத் துவங்கினார் தேவர். அவர் சென்னைக்கு வந்த போது எடுத்து வந்தது 10,000 பணமும், பியட் காரும் தான்.
மேலும் தேவர் பிலிம்ஸ்-ன் எம்பளமாக காளை உருவாக்கப்பட்டது. இவ்வாறு தேவர் பிலிம்ஸ்-ஐ உருவாக்கிய சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆரை மட்டும் வைத்து 17 படங்களைத் தயாரித்தார். அனைத்துமே வெற்றிப் படங்கள். அதன்பின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்று மற்றொரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து பிரம்மாண்ட படங்களை எடுக்க ஆரம்பித்தார்.
சொன்ன தேதியில் ரிலீஸ், நடிகர்களுக்கு முன்கூட்டியே மொத்த சம்பளம், திட்டமிட்ட பட்ஜெட், கதை தேர்ந்தெடுக்கும் யுக்தி போன்றவற்றால் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் குருவாகத் திகழ்ந்தார் சின்னப்ப தேவர்.