படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் ரஜினியைப் பார்த்து, “வயசானலும், உன் ஸ்டைலும், அழகும் அப்படியே இருக்கு..“ என்று கூற பதிலுக்கு ரஜினி “கூடவே பொறந்தது..“ என்று கூறுவார். இது ரஜினி விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை. அபூர்வ ராகங்களில் ஆரம்பித்து இன்றைக்கு ஜெயிலர் வரை அவரின் மாஸ் என்ன என்பது தென்னிந்திய திரைஉலகினருக்கு சொல்லித் தரவேண்டியதில்லை.
கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியனாக அதகளம் செய்திருப்பார் ரஜினிகாந்த். பீஸ்ட் படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு மீண்டும் சன்பிக்சர்ஸ் நெல்சனை நம்பி ஜெயிலர் வாய்ப்பினை வழங்கியது. கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என எண்ணி ரஜினி ரசிகர்களுக்காக அவரே ரசிகனாய் மாறி ஜெயிலர் முத்துவேல் பாண்டியனை பார்த்துப் பார்த்து செதுக்கினார்.
சொன்னபடியே படம் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் டிக்கெட் விற்பனையில் மட்டும் 600 கோடியைத் தாண்டியது. இதுமட்டுமின்றி OTT உரிமை போன்றவற்றைக் கணக்கிடும் போது 1000 கோடியைத் தொட்டது என்றே சொல்லலாம். இப்படி தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து தன் மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். படம் சொல்லிக் கொள்ளும்படி ஹிட் ஆகவில்லை என்றாலும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்காக அவர்களை நிறைவுப் படுத்தியது.
தற்போது ரஜினிகாந்த் ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷுட்டிங் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரஜினி போலீஸ் லுக்கில் வரும் வீடியோவும் வைரலானது. இப்படி சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் எக்கச்சக்க எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில் ஜெயிலர் -2 படம் அடுத்து தயாராக உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வருகிறது.
ரஜினி தற்போது வேட்டையன் படப்பிடிப்பை முடித்த பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார். இப்படம் முடிந்த பின் ஜெயிலர்-2 படத்தின் வேலைகள் ஆரம்பமாகலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கமலைப் போல் ரஜினியும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருவதால் அவரின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.