முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.பாலச்சந்தரின் அற்புத படைப்புதான் சிந்து பைரவி திரைப்படம். 1985-ல் வெளியான இந்தத் திரைப்படம் பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படம். இளையராஜா தான் கற்ற வித்தை அனைத்தையும் இந்தப் படத்தில் பயன்படுத்தி இருப்பார்.
சிவக்குமார், சுகாசினி, சுலோச்சனா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் அப்போது பெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 12 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது. விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட இந்தப் படம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த இசையமைப்பளார், சிறந்த பாடகி, சிறந்த நடிகை என்ற பிரிவுகளில் இளையராஜா, சித்ரா, சுகாசினி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
தந்தையைப் போலவே தனித்துவக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இந்தப்பாட்டெல்லாம் இவர் பாடியதா?
அதுவரை தான் இசையமைக்கும் படங்களுக்கு எப்போதும்போல் பணியாற்றும் இளையராஜாவிற்கு இந்தப் படம் மிகவும் சவாலாக இருந்திருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலான ‘மரிமரி நின்னே..‘ என்ற தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைக்குப் பின் நாயகி சுகாசினி மக்களுக்குப் புரியும் வகையில் தமிழ் இசையில் நாட்டுப்புறப் பாடல் பாடுங்கள் என்று சிவக்குமாரிடம் கேட்பார். அதற்கு சிவக்குமார் கோபப்பட்டு நீங்கள் பாடுங்கள் என்பது போன்ற காட்சி அது.
இந்தக் காட்சிக்குப் பின் சுகாசினி பாடும் பாடலான பாடறியேன்.. படிப்பறியேன் பாடலுக்காக இளையராஜா மிகுந்த சிரத்தை எடுத்தாராம். இந்தப் பாடலுக்கு முன் சிவக்குமார் படிக்கும் தெலுங்கு கீர்த்தனைக்கான ராகத்தில் நாட்டுப்புறப் பாடலை எப்படி சேர்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில் அப்போது ஒரு இசை சார்ந்த புத்தகம் ஒன்றைப் புரட்டிய போது சரியாக அந்தப் பக்கத்திலேயே இந்தப் பாடலுக்கான அடித்தளமும் ராகமும் எழுதப்பட்டிருக்கிறது.
உடனே இளையராஜா டியூன்போட ஆரம்பித்திருக்கிறார். பின்னர் பாடறியேன்.. படிப்பறியேன் என்ற உண்மையான நாட்டுப்புறப் பாடலை ஆரம்பமாக்கி தியாராஜரின் கீர்த்தனைக்கு இணையாக இதே ராகத்தில் இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறார் இசைஞானி.
பாடல் பதிவு முடித்த பின் கே.பாலச்சந்தரிடம் இந்தப் பாடலுக்கு தியேட்டரில் கைதட்டு விழவில்லை என்றால் நான் இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன் என்று சவால் விட்டிருக்கிறார். இளையராஜா சொன்னது போலவே பாடலுக்காக தியேட்டரில் கைதட்டல் பறந்திருக்கிறது. மேலும் தேசிய விருதும் அவரை அலங்கரித்திருக்கிறது.
இவ்வாறு தான் இசையமைத்த பாடல்களிலேயே மிகுந்த சிரத்தை எடுத்து உருவாக்கியதாக பேட்டி ஒன்றில் இளையராஜா தெரிவித்திருக்கிறார்.