படங்களில் ஹீரோவுக்கு நிகராக வில்லனும் கெத்தாக இருந்தால் தான் விறுவிறுப்பாக இருக்கும். அந்தக் காலத்தில் எம்ஜிஆருக்கு நிகராக சண்டையிலும், மிரட்டலிலும் சரிக்குச் சமமான வில்லனாகத் தோன்றியவர் எம்.என்.நம்பியார். இருவரும் நிஜத்தில் நல்ல நண்பர்கள். எப்படி என்று பார்ப்போமா…
எம்ஜிஆர் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த படம் ராஜகுமாரி. 1947ல் வெளியானது. இந்தப் படத்தில் எம்ஜிஆரை சிறையில் அடைத்து இருப்பார்கள். எம்ஜிஆர் வாழ்க்கையே வெறுத்து ஒரு கட்டத்தில் அந்த அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவர் தூக்கில் தொங்க வேண்டும். காட்சி அமைப்பின்படி அவரது எடை தாங்காமல் உத்தரம் உடைந்து விழ வேண்டும். ஆனால் அப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டும் உத்தரம் விழ நேரமாகி விட்டது.
எம்ஜிஆரின் உடலோ அந்தரத்தில் தொங்குகிறது. குரல்வளை நெரிக்கப்பட, கழுத்து வலப்பக்கம் திரும்புகிறது. எடை கீழாக இழுக்கிறது. நெஞ்சில் வலி. உச்சந்தலையில் ரத்தம் ஏறுகிறது. இன்னும் சில விநாடிகள் இதே நிலை நீடித்தால் அதே கதி தான். அடுத்த வினாடியில் உத்தரம் உடைய அதன் கட்டைகள் கீழே விழுகிறது. எம்ஜிஆர் முன்பக்கம் சாய்ந்து விழுகிறார். பரபரப்பானது படக்குழு.
எம்ஜிஆரோ இந்த நிலையைப் பற்றிக் கவலைப்படவில்லை. யாரும் இந்தக் காட்சியில் நடிக்க தகுதி இல்லாதவர் என்று சொல்லிவிடக்கூடாதே என்று பயந்தார் எம்ஜிஆர். அதற்காகவே கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தினார். அப்போது களைத்து இருந்த அவரது முகத்துக்கு அருகே குவளையில் நீர் வருகிறது. கொண்டு வந்தவர் வில்லன் நம்பியார். அன்று தொடங்கிய அவர்களது நட்பு கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை தொடர்ந்தது.
இருவரும் நண்பர்கள் என்றாலும் திரையில் சண்டைக்காட்சி எனில் ஆக்ரோஷமாக மோதுவர். சர்வாதிகாரி படத்தில் எம்ஜிஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலில் புகுந்தது. அரசிளங்குமரி படத்தில் நம்பியாரின் வாள் எம்ஜிஆரின் இடது கண்புருவத்தைப் பதம் பார்த்தது. அந்தத் தழும்பு கடைசி வரை இருந்தது.
இதெல்லாம் தொழிலில் சகஜமப்பா என்ற புரிதல் இருவருக்கும் இருந்தது. அதே நேரம் தன்னை ராமச்சந்திரா என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு உரிமையை எம்ஜிஆர் அவருக்கு வழங்கியிருந்தார். இதுவே அவர்களது நட்பின் நெருக்கத்துக்கு உதாரணம்.