கேப்டன் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்ற போது அவருக்கு வாழ்த்து சொல்ல நடிகர் வையாபுரி அவரது வீட்டிற்கு சென்ற போது அங்கே நடந்த சம்பவம் பற்றி சமீபத்திய பேட்டியில் நடிகர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் மறைந்த நிலையில் நடிகர் வையாபுரி அவருடன் நெருக்கமாக பல நாட்கள் இருந்துள்ளார். அந்த நாட்கள் குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் ஒரு விஷயத்தை எடுத்து விட்டால் அதை முடிக்கும் வரை முன்னாடி நிற்பார் என்றும் யாரிடமும் ஒப்படைக்காமல் இல்லாமல் கடைசிவரை தானே இருந்தேனே முடிப்பார் என்றும் வையாபுரி கூறியுள்ளார்.
மதுரைக்கு அனைத்து நட்சத்திரங்களையும் அழைத்துக் கொண்டு ஒரு விழாவை நடத்த கேப்டன் சென்றதாகவும் அப்போது மதுரையிலிருந்து அனைவரும் ரயிலில் வந்து கொண்டிருந்தபோது யாரும் சாப்பிடவில்லை என்பதை அறிந்ததும் ரயில் டிரைவரிடம் சொல்லி சிறிது நேரம் வண்டியை நிற்க சொல்லி அனுமதி கேட்டு அதன் பிறகு அவர் எங்கெங்கோ சென்று சாப்பாடுகள் வாங்கி வந்து எல்லாருக்கும் கொடுத்தார் என்றும் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதுதான் அவரது குழந்தை மனம் என்றும் கூறினார்.
அதேபோல் காவிரி பிரச்சனைக்காக நெய்வேலிக்கு சென்றபோது எல்லாரையும் பஸ்ஸில் தான் அழைத்து கொண்டு சென்றார். மேலும் பத்திரமாக அனைவரையும் கூட்டிக்கொண்டு வந்தார். சிங்கப்பூர், மலேசியா போனபோது கூட ரஜினி, கமல் உள்பட அனைவரையும் சமமாக நடத்தினார். பாகுபாடு இல்லாமல் அவரது தலைமையில் ஒற்றுமையாக சிங்கப்பூர், மலேசியா பயணம் நடந்தது என்று வையாபுரி கூறினார்.
விஜயகாந்த்துடன் கள்ளழகர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது மறுநாள் ’துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. அதை தயங்கிக் கொண்டே விஜயகாந்திடம் சொன்னபோது உடனே அவர் தன்னுடைய பென்ஸ் காரை எடுத்துக்கொண்டு போ, நான் இங்கே பார்த்து சமாளித்துக் கொள்கிறேன் என்று என்னை அனுப்பி வைத்தார். அந்த பெரிய மனது வேறு யாருக்கும் வராது என்று வையாபுரி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தன்னுடைய திருமணம் சென்னை வடபழனி கோயிலில் நடந்த போது அவரே நேரில் வந்து எனக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார் என்றும் அதை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்றும் கூறினார்.
மேலும், “தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற போது நேராக அவருக்கு நான் வாழ்த்து சொல்ல அவருடைய வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து கூறினாயா என்று என்னிடம் கேட்டார். நான் இன்னும் இல்லை. அவரிடம் அப்பாயின்மென்ட் கேட்டு இருக்கிறேன், இன்னும் தரவில்லை என்று கூறினார். முதலில் அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அதன் பிறகு எனக்கு வாழ்த்து சொல்ல வா, அதுதான் முறை என்று என்னை திருப்பி அனுப்பினார் அவருடைய பரந்த மனம் போது எனக்கு புரிந்தது” என்று கூறினார்.
இதுபோன்ற பல மலரும் நினைவுகளை வையாபுரி அந்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.