புன்னகை அரசி நடிகை கே.ஆர். விஜயாவை தெரியாதவர்கள் நிச்சயம் யாரும் இருக்க முடியாது. அதே வேளையில், அவருடைய சகோதரி கே ஆர் சாவித்திரியும் ஒரு நடிகை தான் என்பது பலரும் அறியாத உண்மை.
கே.ஆர். விஜயா அளவுக்கு இல்லை என்றாலும் கே.ஆர். சாவித்திரி ஓரளவு திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் அவர் ஏராளமான மலையாள திரைப்படங்கள் தான் நடித்தார். கடந்த 1976 ஆம் ஆண்டு ’சுழி’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் பிரேம் நசீர் நடித்த படங்களில் நடித்துள்ள சாவித்திரி, 1976 ஆம் ஆண்டு புனித அந்தோனியார் என்ற படத்தின் மூலம் தான் அவர் தமிழுக்கு அறிமுகம் ஆனார்.
கே.ஆர்.விஜயா போலவே இவரும் குணச்சித்திர வேடத்தில் கலக்குவார் என்றாலும் இவருக்கு குறைவான வாய்ப்புகளே தமிழில் கிடைத்தது. இருப்பினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
கைவரிசை, என்னுயிர் நண்பன், வீரன் வேலு தம்பி, கூலிக்காரன், மனைவி ஒரு மந்திரி, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். பார்த்திபன் நடித்த தாலாட்டு பாடவா என்ற திரைப்படத்தில் இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்திருக்கும். அதே போல் தியாகராஜன் நடித்த சேலம் விஷ்ணு, முரளி நடித்த தாலி கட்டிய ராசா, ரேவதி தனது கணவர் சுரேஷ் மேனனுடன் நடித்த புதிய முகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ’எழுதியது யாரடி’ என்ற திரைப்படத்தில் நடித்த பின், கே.ஆர். சாவித்திரி தமிழில் நடிக்கவில்லை. தமிழ் மட்டுமின்றி ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தென்றல் என்ற சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.
நடிகை கேஆர் சாவித்திரிக்கு இரண்டு மகள்கள் உண்டு. அனுஷா மற்றும் ராகசுதா ஆகிய இருவருமே நடிகைகள் ஆவார். இதில் ராகசுதா என்பவர் ’தங்கத்தின் தங்கம்’ என்ற ராமராஜன் படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். அதேபோல் நடிகை அனுஷா ’தங்கராசு’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கிழக்கு வீதி, குருதிப்புனல், சின்னமணி உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.