ஒரு படம் ரிலீஸாகி படு மோசமாக தோல்வி அடைந்த பிறகு மீண்டும் எடுத்து அந்த படத்தை சில்வர் ஜூப்ளி ஆக்க முடியுமா என்று கேட்டால் சாத்தியமே இல்லை என்பதுதான் பதிலாக வரும். ஆனால் அதை சாத்தியமாக்கியவர் தான் இயக்குனர் விசு. அந்த படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’.
‘உறவுக்கு கைகொடுப்போம்’ என்ற நாடகம் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களால் இயக்கப்பட்டு விசு அவர்கள் நடித்து வெளியானது. இந்த நாடகத்தின் மூலக்கதையை எழுதியது விசு. இந்த நாடகத்தை திரைப்படம் ஆக்கும் உரிமையை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வாங்க, ஒய்.ஜி.மகேந்திரன் இதனை திரைப்படமாக இயக்கினார்.
இந்த படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சௌகார் ஜானகி நடித்திருந்தனர். இந்த படம் 1975ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டம் கொடுத்தது. கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது.
இந்த நிலையில் தான் கடந்த 1985ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் விசுவை அழைத்து தங்கள் நிறுவனத்திற்காக ஒரு திரைப்படம் இயக்குங்கள் என்று கேட்டுக் கொண்டதாகவும் அப்போது விசு பல கதைகள் கூறிய போதும் ஏவிஎம் நிறுவனத்திற்கு அந்த கதை பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து தான் அவர் ‘உறவுக்கு கை கொடுப்போம்’ என்ற கதையை கூறினார். அந்த கதை ஏவிஎம் நிறுவனத்திற்கு பிடித்து விட்டது. ஆனால் இந்த கதையை ஏற்கனவே ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கினார் என்றும் அந்த படம் படுதோல்வி அடைந்தது என்றும் விசு உண்மையை உடைத்து கூறினார்.
ஆனால் அந்த படம் வேண்டுமானால் தோல்வி அடைந்திருக்கலாம், ஆனால் நம் படம் தோல்வி அடையாது என்று நம்பிக்கை கொடுத்த ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தை நீங்களே இயக்குங்கள் என்று அனுமதி அளித்தது.
டிகே பட்டம்மா முதல் சின்மயி வரை.. பாடகிகளின் முதல் தமிழ்ப்பாடல் பட்டியல்..!
‘சம்சாரம் அது மின்சாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இந்த படம் உருவானது. லட்சுமி, சந்திரசேகர், கிஷ்மு, ரகுவரன், டெல்லி கணேஷ், இளவரசி, மனோரமா, மாதுரி, கமலா காமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விசு அம்மையப்ப முதலியார் என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
படம் நாடகம் போலவே இருந்தாலும் திரைக்கதை மிக அருமையாக அமைக்கப்பட்டிருந்ததால் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடி இந்த படத்தின் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் 10 மடங்கு லாபம் கொடுத்தது.
அதுமட்டுமின்றி தமிழ் திரைப்பட வரலாற்றில் அதிக அளவு வசன கேசட் விற்பனையானது இந்த படத்திற்கு தான் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த படம் உருவாகி கொண்டிருந்தபோது மனோரமாவின் கண்ணம்மா என்ற கேரக்டரே இல்லை. ஏனெனில் உறவுக்கு கைகொடுப்போம் என்ற படத்தில் அப்படி ஒரு கேரக்டர் இல்லை. ஆனால் ஏவிஎம் நிறுவனம்தான், ஹீரோவின் வீட்டில் வேலைக்காரியாக ஒரு காமெடி கேரக்டரை வைத்தால் நன்றாக இருக்கும் என்று ஐடியா கொடுக்க விசுவும் அதை ஏற்றுக் கொண்டு ஒரு காமெடி கேரக்டரை உருவாக்கி மனோரமாவை அதில் நடிக்க வைத்தார். மனோரமாவும் தனது நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.
மொத்தத்தில் ஒரு தோல்வி அடைந்த படத்தை மீண்டும் எடுத்து மிகப்பெரிய சூப்பர் ஹிட் ஆக்கிய பெருமை விசு அவர்களுக்கு சேர்ந்தது. இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்திருந்தனர். ஐந்து பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெள்ளி விழாவில் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் கலந்து கொண்டு இந்த படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் தனது கைகளிலாயே பரிசளித்தார்.
தொலைந்து போன தமிழ் திரைப்படம்.. இப்போ நினைச்சா கூட பார்க்க முடியாத படம் எது தெரியுமா?
தமிழில் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.