பிரபல இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதும்போது ரஜினியை மனதில் வைத்து எழுதியதாகவும் ஆனால் ரஜினியை சந்தித்து கதை சொல்ல முடியவில்லை என்பதால் விஜயகாந்த்தை வைத்து எடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த படம் தான் ‘அம்மன் கோவில் கிழக்காலே’.
விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படத்தை சுந்தரராஜன் இயக்கிய நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து அவர் சுகமான ராகங்கள், குங்குமச்சிமிழ் ஆகிய படங்களை இயக்கினார். அதன் பிறகுதான் அவர் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ என்ற படத்தின் கதையை எழுதி முடித்தார். இந்த கதையை எழுதும்போதே இந்த கதையின் நாயகனான சின்னமணி என்ற கேரக்டருக்கு ரஜினிகாந்த் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தார். அதேபோல் கண்மணி கேரக்டருக்கு ராதா என்று முடிவு செய்த அவர், கதையை முழுதாக எழுதி முடித்ததும் ரஜினியை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.
இதனையடுத்து முரளி நடித்த ‘பூவிலங்கு’ என்ற திரைப்படம் ஹிட்டாகியதால் முரளி மற்றும் ரேவதியை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்தார். ஆனால் முரளியின் அப்பா, தற்போது முரளி கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த படத்தை முடித்துக் கொண்டுதான் தமிழில் நடிப்பார் என்று கூறிவிட்டதால் அவரது யோசனை விஜயகாந்த் பக்கம் சென்றது.
ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘வைதேகி காத்திருந்தாள்’ சூப்பர் ஹிட் ஆகியிருந்தால் விஜயகாந்தையே மீண்டும் வைத்து இந்த படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் கதை சொன்னார். கதையை கேட்டவுடன் விஜயகாந்த் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ரஜினிக்கு ஜோடியாக ராதாவை நடிக்க வைக்க முடிவு செய்த சுந்தர்ராஜன், விஜயகாந்த் ஜோடியாக ராதாவை நடிக்க வைத்தார். இந்த படம் கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.இந்த படம் விஜயகாந்த்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஊடகங்களிலும் நல்ல விமர்சனம் கிடைத்தது.
விஜயகாந்த்தின் 2வது படம்.. ஷோபாவுடன் நடித்த ஒரே படம்.. இளையராஜாவால் ஜொலித்த அகல் விளக்கு..!
இந்த படத்தில் ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, செந்தில், ராதா ரவி, வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்.சுந்தர்ராஜன் படம் என்றாலே இசைஞானி இளையராஜா தான் இசை. இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்களை இளையராஜா கம்போஸ் செய்திருந்தார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த படத்தில் இடம்பெற்ற ரொமான்ஸ் காட்சிகள், காமெடி காட்சிகள், உருக்கமான செண்டிமெண்ட் காட்சிகள், பாடல்கள், பின்னணி இசை என அனைத்துமே மிகவும் அருமையாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் மூலம் விஜயகாந்த் மிகப்பெரிய புகழை பெற்றார்.
பின்னாளில் ரஜினியை சுந்தர்ராஜன் சந்தித்தபோது இந்த படத்தின் கதையை உங்களுக்காக தான் எழுதினேன், ஆனால் உங்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விஜயகாந்த்துக்கு படம் சென்றது என்று கூறினார். அதை ரஜினியால் நம்பவே முடியவில்லை. என்னிடம் ஒரு போன் போட்டு சொல்லி இருந்தால் நான் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பேனே என்று கூறினார்.
அதனையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தரராஜன் இயக்கிய படம் தான் ‘ராஜாதி ராஜா’ என்பதும் அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.