அரசியலாகட்டும், சினிமாவாகட்டும் இரண்டிலுமே தனக்கென தனி முத்திரையைப் பதித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழகத்தையே ஆண்ட இரும்புப் பெண்மணி. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன் போன்ற நடிகர்கள் அனைவருடனும் நடித்துப் புகழ் பெற்றார்.
தான் திரையுலகில் உச்சத்தில் இருந்து போது ரசிகர் ஒருவர் எழுதிய லெட்டருக்கு ஜெயலலிதா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?
இவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது இவருக்கு ரசிகர்கள் பலரும் கடிதம் எழுதுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதில் கடிதமும் எழுதமாட்டார். அந்த நிலையில்தான் ஒரு ரசிகரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் ‘நான் உங்களை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த நாளுக்குள் நீங்கள் சம்மதிக்கவில்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் எழுதியிருந்தார். ஆனால் ஜெயலலிதா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதெல்லாம் கங்கை அமரன் ஹிட்ஸ்-ஆ? சினிமாவின் மினி பல்கலைக்கழகம் ஆன கங்கை அமரன்..
சில நாட்கள் கழித்து அந்த ரசிகரிடமிருந்து மீண்டும் ஒரு கடிதம் வந்தது. ‘இந்த தேதிக்குள் என்னை நீங்கள் திருமணம் செய்ய நீங்கள் சம்மதிக்க வேண்டும். இல்லையெனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் எழுதியிருந்தார். ஜெயலலிதா அதற்கும் பதிலளிக்கவில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த தேதிக்குள் சம்மதிக்கவில்லை எனில் தற்கொலை செய்துகொள்வேன் என அந்த ரசிகர் எழுதியிருந்தார்.
இந்தமுறை அவருக்கு பதில் கடிதம் எழுதிய ஜெயலலிதா ‘எனக்கு கணவராக வருபவர் கொடுத்த வாக்கை காப்பாற்றுபவராக இருக்க வேண்டும். மற்ற விஷயங்களை விட கொடுத்த வாக்கை காப்பாற்றுவது முக்கியம். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் மீண்டும் மீண்டும் மீறும் உங்களை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்’ என அவரின் பாணியிலேயே பதில் எழுதி பாடம் புகட்டினார் ஜெயலலிதா.
அந்த காலகட்டங்களிலேயே தனது புத்திக் கூர்மையால் ஆண்களைச் சமாளித்த ஜெயலலிதா பின்னாளில் அரசியலிலும் எதிரணியினரை தனது சாதுர்யமான பதிலால் நிலைகுலையச் செய்தவர் என்பது உலகறிந்த செய்தி.