இதெல்லாம் கங்கை அமரன் ஹிட்ஸ்-ஆ? சினிமாவின் மினி பல்கலைக்கழகம் ஆன கங்கை அமரன்!

சினிமாவில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட பல நூறு பேரின் உழைப்பு தேவைப்படும். ஆனால் ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் தயாரிப்பு, இசை, இயக்கம், பாடல்கள், வசனம், கதை, திரைக்தை, நடிப்பு என அனைத்திலும் உலக நாயகனைப் போல் சகலகலா வல்லவராகத் திகழ்பவர்தான் கங்கை அமரன். தமிழ் சினிமாவில் மினி பல்கலைக்கழகமான இவர் சினிமாவில் தொடாத துறைகளே இல்லை.

‘16 வயதினிலே’ மூலம் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு புதியதொரு பாதையைத் திறந்து வைத்தார். அதுமட்டுமா? கங்கை அமரனுக்கும்தான்! அந்தப் படத்தில் கங்கை அமரனுக்குப் பாட்டெழுத வாய்ப்பு கொடுத்தார். அந்தப் பாட்டு விருதுக்குரிய பாடலாக அமைந்தது. எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்த அந்தப் பாடல் ‘செந்தூரப்பூவே… செந்தூரப்பூவே’. அப்போதிருந்தே கங்கை அமரனுக்கு குவியத் தொடங்கின பாராட்டுப் பூக்கள்.

இந்தப் பாட்ட அவங்க தான் பாடனும் : கண்டிஷன் போட்ட இளையராஜா : இன்றும் காதல் கானத்திற்கு பெயர் போன பாடல்

மீண்டும் இன்னொரு வாய்ப்பு. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’. அந்தப் படத்தில் மீண்டும் பூவை வைத்து பாடல் இயற்றினார் கங்கை அமரன். செந்தூரப்பூவைப் போல் இந்த முறை ‘பூவரம்பூ பூத்தாச்சு’. இந்த இரண்டு பாடல்களும் இன்று வரைக்கும் ஹிட் பாடல்கள் வரிசையில் உள்ளது.

ஓ.. கங்கை அமரன் பாட்டெழுதுவார் என்று எல்லோருக்கும் தெரியத் தொடங்கிய அதேவேளையில், ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ என்று இசையமைக்க ஆரம்பித்தார். முக்கியமாக, பாக்யராஜின் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ இன்றைக்கும் எங்கு ஒலித்தாலும் நின்று கேட்கும் கூட்டம் உண்டு.

பிறகு ‘மெளன கீதங்கள்’ படத்தில் ’மூக்குத்திப்பூ’வுடன் வந்தார். இப்படியாக தொடர்ந்து பாட்டெழுதிக் கொண்டும் படங்களுக்கு இசையமைத்தும் கொண்டும் இருந்தார். நடுநடுவே பாடவும் செய்தார்.

பாடல்கள் எழுதியது ஒருபக்கம், இசையமைத்தது ஒரு பக்கம், பாடியது ஒரு பக்கம் என்றிருக்கும் போது, இடையே டப்பிங்கும் பேசினார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜுக்கு குரல் கொடுத்தது இவர்தான் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்து ‘கோழி கூவுது’ படத்தை இயக்கினார். பல ஊர்களில் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. சில ஊர்களில் 250 நாட்களைக் கடந்தும் ஓடியது. ‘சங்கிலி’ படத்தில் அறிமுகமான பிரபுவுக்கு அட்டகாசமான பிரேக் கிடைத்தது ‘கோழி கூவுது’ படம் மூலமாகத்தான். பின்னாளில், ராமராஜனுக்கு ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ மூலம் அப்படியொரு வெற்றி கிடைக்கச் செய்தார், இயக்குநர் கங்கை அமரனாக.

‘சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்’ என்றும் எழுதுவார். ‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ என்றும் எழுதுவார். ‘பூத்துப்பூத்துக் குலுங்குதடி பூவு’ என்றும் ‘அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்’ என்றும் ’என் இனிய பொன்நிலாவே’ என்றும் எழுதினார். இப்படித்தான் என்றில்லாமல் எப்படியும் எழுதினார். ‘அட கங்கை அமரனா இந்தப் பாட்டு எழுதியது’ என்று வியக்கிற அவரின் பாடல்கள் லிஸ்ட் அதிகம்.

கங்கை அமரனின் பாடல்கள் பிடிக்கும். பாட்டுக்கு மெட்டுப் போட்டால் பிடிக்கும். பாடலைப் பாடினாலும் பிடிக்கும். பாடல்கள் கொண்ட படத்தை இயக்கினாலும் பிடிக்கும். மொத்தத்தில் தமிழ் சினிமாவின் மினி பல்கலைக்கழகம் தான் கங்கை அமரன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...