இந்தியாவின் நைட்டிங்கேல், பத்மபூஷன், கான சரஸ்வதி இசைக்குயில், மெல்லிசை அரசசி என இத்தனை பட்டங்களுக்கும் சொந்தக்காரர் யார் என்றால் அவர் பி சுசீலா தான். ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை பூர்வீகமாக கொண்ட பி சுசீலாவின் இசைப்பணி அளப்பரியது. தமிழ், , மலையாளம், தெலுங்கு , இந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 25,000 பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
பி. சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் என்ற நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். சுசீலாவின் இசைத் திறமையைக் கண்ட பழம்பெரும் இயக்குனர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது ‘பெற்ற தாய்’ படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார்.
அதன்பின் 1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தது.
1950 ஆம் ஆண்டுகளில் எம்.எல். வசந்தகுமாரி, ஜக்கி, கே.பி. சுந்தராம்பாள் போன்ற பாடகிகள் பெரும் இசை சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருக்க தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து பல பாடல்களை பாட ஆரம்பித்தார் பி. சுசீலா.
1960 முதல் 85 வரையிலான காலகட்டங்களில் பி. சுசிலாவின் ராஜ்ஜியம் தொடர்ந்தது. இடைப்பட்ட காலங்களில் எல்.ஆர். ஈஸ்வரி, எஸ் ஜானகி, வாணி ஜெயராம் போன்ற இசை மேதைகளும் பல பின்னணி பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தனர்.
இன்னிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் பசுமையான பாடல்களை சுசீலாவின் குரலில் இயற்றினர். தெலுங்கில் புகழ்பெற்ற பாடகர்களான கண்டசாலா, தமிழில் டி.எம். சௌந்தரராஜன் மற்றும் கன்னடத்தில் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் அவரது டூயட் பாடல்கள் தென்னிந்திய இசைத்துறையில் டூயட் பாடல்களின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.
அதன் பிறகு எஸ். பி. பாலசுப்ரமணியம், ஏசுதாஸ் போன்ற ஜாம்பவான்களிடம் இணைந்து தனது வசீகரக் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டார். விஸ்வநாதன், கே. வி. மகாதேவன் ஆகிய இசை ஜாம்பவான்களுக்கு பிறகு இளையராஜாவுடன் அவரது பயணம் தொடர்ந்தது.
முதல் மரியாதை படத்தை ரீமேக் செய்யும் கௌதம் மேனன்! ஹீரோவாகும் கமலஹாசன்!
இசைஞானியும் பி. சுசீலாவின் குரலில் பல்வேறு ஹிட் பாடல்களை பதிவு செய்தார். அதன் பின் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானும் பி. சுசீலாவின் இனிய குரல் வளத்தை பயன்படுத்த தவறவில்லை.
இவ்வாறு மூன்று தலைமுறை இசை ஜாம்பவான்களுடன் பயணம் செய்து 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இசை துறைக்கு அளப்பரிய சாதனை செய்த பி. சுசீலாவுக்கு தற்போது தமிழ்நாடு இயல் இசை பல்கலைக்கழகம் டாக்டரேட் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. ஏற்கனவே கலைமாமணி பட்டம் வழங்கிய நிலையில் தற்போது டாக்டரேட் பட்டமும் பி. சுசிலாவின் சாதனை மகுடத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
