பிறரால் ஏமாற்றப்படுகிறீர்களா? துக்கத்தால் துவண்டு விழுகிறீர்களா? உங்களைக் காக்க வருகிறாள் வாராஹி அம்மன்

By Sankar Velu

Published:

சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவார்கள். எப்போதும் தோல்வி தான் இவர்களுக்கு வரும். பிறரால் வஞ்சிக்கப்படுதல், ஏமாற்றப்படுதல் என்று இவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து அலைகழிக்கும்.

வாழ்க்கையில் ஏன் தான் நமக்கு மட்டும் இப்படி சோதனைகள் வருகிறதோ என தினமும் எண்ணி எண்ணி கண்கலங்குவர். இவர்கள் இன்று நவராத்திரியின் 3ம் நாளான இன்று வாராஹி அம்மனை வழிபட்டால் உடனடி பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி 3ம் நாளான இன்று (17.10.2023) அன்று நாம் எப்படி பூஜை செய்ய வேண்டும்? இன்று அம்பிகைக்கு என்ன ரூபம்? என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

Navarathiri 3
Navarathiri 3

இன்று அம்பிகைக்கு வாராஹி என்று பெயர். மகிஷனை வதம் செய்யும் அம்மனாகக் காட்சி தருகிறாள். வாராஹி என்ற தெய்வமே அற்புதமான போர் சக்தி.

நவராத்திரியின் முதல் 3 நாள்கள் அம்பிகையை மலைமகளாக, பார்வதியாக, துர்க்கையாக வழிபடுகிறோம்.

அடுத்த 3 நாள்கள் அலைமகளாக மகாலெட்சுமியை வழிபடுகிறோம். அதற்கு அடுத்த 3 நாள்கள் சரஸ்வதியை அதாவது கலைமகளை வழிபடுகிறோம்.

இன்று மலைமகளின் கடைசி அவதாரம் வாராஹி அம்மனை வழிபடுகிறோம். பழியைத் தீர்க்கும் தெய்வமாக, எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் நம்மைக் காக்கும் தெய்வமாக, பாவத்தை நம்மிடமிருந்து போக்கும் தெய்வமாக விளங்கும் சக்தி படைத்தவள் தான் வாராஹி. இவள் ராஜராஜேஸ்வரியின் சேனாதிபதியாக விளங்கும் தெய்வம்.

இந்த அம்பிகையின் படம் இல்லை என்றாலும் விளக்கு வைத்தாவது வழிபடலாம். தீராத கடன் பிரச்சனைகள் தீரும். பிறரால் வஞ்சிக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும் பிறரால் தொல்லை நேருகிறது என்றால் அதில் நமக்கு வெற்றியைத் தருகிறாள் வாராஹி. இவள் ஏவல் தெய்வமல்ல. வாராஹி தெய்வம் பில்லி, சூனியம், ஏவலைப் போக்குபவள்.

Navarathiri 3 kolu
Navarathiri 3 kolu

துர்க்கையின் ரூபமே போர்க்குணம் தான். வாராஹி கையிலேயே கலப்பை, ஆயுதம் எல்லாம் இருக்கும். பிறருக்குத் தீமை செய்பவர்கள் தான் இந்த உருவங்களைக் கண்டு பயப்பட வேண்டும். இந்த அம்பிகையை நாம் தாயாக ஏற்றுக் கொண்டால் நமக்கு யாரும் பிரச்சனை செய்யும்போது அந்த அம்பிகை பார்த்துக் கொள்வாள். நமக்கு எத்தகைய துன்பங்களில் இருந்தும் விடுதலையைத் தந்து விடுவாள்.

இவளிடம் உள்ள ஆயுதங்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை. தீயவர்கள் தான் பயப்பட வேண்டும்.

இன்று மலர் வகை கோலம் போடலாம். சம்பங்கி மலரும், துளசி இலையும் உகந்தது. சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக வைக்கலாம். கடலை வகைகளில் காராமணி சுண்டலும், பழங்களில் பலாப்பழமும் படையல் வைக்கலாம். இன்று காம்போதி ராகத்தில் அமைந்த பாடலைப் பாடலாம்.

பொதுவாகக் கொலு வைத்தவர்கள் காலை, மாலை என இருவேளையும் பூஜை செய்ய வேண்டும். காலை 9 மணிக்குள்ளும், மாலை 6 மணிக்கு மேலும் பூஜை செய்யலாம். கொலு வைக்காதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல பூஜை செய்யலாம்.