சிவகார்த்திகேயன் எனக்கு பண்ண துரோகத்துக்கு இந்த ஜென்மத்துல மன்னிக்க மாட்டேன்.. டி.இமான் பரபரப்பு..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என இசையமைப்பாளர் டி. இமான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.

தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருதையே தட்டிச் சென்றவர் டி. இமான். கோலிவுட்டின் டாப் இசையமைப்பாளர்களில் டாப் 3 பொசிஷனில் இடம் பெற்றிருந்த இமான் சமீப காலமாக ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய்விட்டார்.

சிவகார்த்திகேயன் நடித்த மனங்கொத்தி பறவை படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்த இமான் தொடர்ந்து அவருடன் பல வெற்றி படங்களில் பயணிக்க ஆரம்பித்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சிட்டி தீம் படங்களுக்கு அனிருத்தையும் வில்லேஜ் சப்ஜெக்ட் என்றால் இமானையும் தான் தான் இசையமைக்க அழைப்பார்.

சிவகார்த்திகேயன் உடன் ஹிட் காம்போ

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா மற்றும் நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். சிவகார்த்திகேயன் மற்றும் இமான் காம்போவில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து உள்ளன.

ஆனால், சமீபகாலமாக இமானை நடிகர் சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளவே இல்லை. மேலும், இமான் இசையில் வெளியான கடைசி சில படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவரது மார்க்கெட் அதிரடியாக சரிந்துவிட்டது. குடும்பத்திலும் விவாகரத்து உள்ளிட்ட சர்ச்சைகள் வெடித்தன.

சிவகார்த்திகேயன் துரோகம் செஞ்சுட்டார்

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த டி. இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்திருப்பதாகவும், அவர்தான் தனது வாழ்க்கையை கெடுத்து விட்டார் என்றும் இந்த ஜென்மத்தில் இனிமேல் அவருடன் பணியாற்றவே மாட்டேன் என்றும் கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

டி. இமானுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் என்ன துரோகம் செய்தார் என்பதை அவர் சொல்ல மறுத்து விட்டார். அதை சொன்னால் குழந்தைகளின் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் பாதிக்கும் என்கிற அளவுக்கு இமான் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளாசும் ரசிகர்கள்

இமான் சொல்லும் அளவுக்கு அப்படி என்ன மோசமான துரோகத்தை சிவகார்த்திகேயன் செய்து விட்டார் என்கிற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயன் முகத் திரையை கிழித்து தொங்க விட்டுள்ளார் இமான், பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஆளும் மாறிவிட்டார் சிவகார்த்திகேயன், அவர் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன என பலரும் தற்போது ட்வீட்களை போட ஆரம்பித்துள்ளனர்.

டி. இமான் இப்படி ஒரு வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், அதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து என்ன பதில் வருகிறது என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் தான் டி. இமான் இப்படி வஞ்சத்தை காட்டி வருகிறார் என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.