இயக்குனர் சிம்புதேவன் மாறுபட்ட படங்களை இயக்குபவர். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’, ‘புலி’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஆகியவை சிம்புதேவனின் படங்களாகும்.
இந்த படங்களை அனைத்தும் இப்போது பார்த்தாலும் ரசிக்கும் படியாக இருக்கும். புலி சரியான வெற்றி பெறவில்லை என்று சொன்னாலும், தமிழில் இப்படி ஒரு மாயாஜால கதை இனி வருமா? எனத் தெரியவில்லை. அறை எண் 305ல் கடவுள் படத்தில் சாதாரண மனிதன் கடவுள் ஆனால் என்ன ஆகும்?, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஒவ்வொரு நொடியும் மனித வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் என்பதை கூறும். இவ்விரு படங்களுமே நல்ல ரசனையானவை.
இயக்குனர் சிம்புதேவனுக்கு படங்கள் வரைவது, காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பது, ஃபேண்டஸி படங்களை பார்ப்பது என எல்லாவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்ததும், விகடன் பத்திரிக்கையில் ஓவியராக பணியாற்றி நிறைய கார்ட்டூன் தொடர்களை எழுதி வந்திருக்கிறார். பின் இயக்குனராக முயற்சித்த போது, இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இயக்குனர் சேரன் அப்போது வெற்றிகொடி கட்டு படப்பணியில் இருந்திருக்கிறார். அந்தப் படத்தில், சிம்பு தேவன் உதவி இயக்குனராக சேர்ந்து பணிபுரியத் தொடங்கியிருக்கிறார். கதை ஒன்றை எழுதியிருந்த சிம்புதேவன் தன் நண்பர்களிடம் அதை கூறியுள்ளார்.
நண்பர்கள் கதை சூப்பராக உள்ளது என்று கூறி பாராட்டியுள்ளனர். யார் அந்த கதையின் ஹீரோவாக இருந்தால் நன்றாக இருக்கும் என யோசித்து அரசனாக நடிப்பதற்கு கமல்ஹாசன் தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறியிருக்கிறார்கள்.
அதற்கு சிம்புதேவன், இல்லை வடிவேலு தான் சரியாக இருப்பார் என்று கூறி அதிர வைத்திருக்கிறார். சிம்பு தேவன் சரியான நடிகரை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை படப்பிடிப்பு தளத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்ததும் புரிந்து கொண்டார்களாம்.
அந்த சமயத்தில், இயக்குனர் ஷங்கரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கதை ஷங்கருக்கு பிடித்து போகவே அவரும் தயாரிக்க முடிவு செய்துவிட்டாராம்.
அரசன் என்பவன் வீரனாக மட்டுமல்ல புலிகேசி போல ஒருவனாகவும் இருக்கலாம் என்பதை ரசிக்கும் படி சொல்லியிருப்பார். அதில் வடிவேலு நடிப்பு கனக்கச்சிதமாக இருக்கும் அவருக்கு இணையாக இளவரசும் ஈடுகொடுத்திருப்பார்.
உலக நாயகன் கமல்ஹாசன், இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வடிவேலுவின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டதாக கூறியிருக்கிறார். இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் வரப்போகிறது என்று தெரிந்ததும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியது. இருப்பினும், ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ சில காரணங்களால் கைவிடப்பட்டது.