குலசை முத்தாரம்மனுக்கு பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எது சரி, எது தவறு என்பது நமக்குத் தெரியாது. என்றாலும், முத்தாரம்மனின் வரலாறாகச் சொல்லப்படும் இந்த அஷ்டகாளிகள் கதைகளையும் பார்ப்போமே…
ஒரு நாகக்கன்னி வயிற்றில் இருந்து 8 பெண் குழந்தைகள் காளிகளாக பிறந்து வருகிறார்கள். அவங்கள்ல ஒருவர் தான் முத்தாரம்மன். தானாவதி என்ற அரக்கி பிரம்மாவை நோக்கி கடுமையாகத் தவம் இருக்கிறாள். அவள் வரம் வாங்கி ஒரு ஆண்மகனைப் பெற்றிருக்கிறாள். அவன் எருமை மாட்டுத்தலையோட பிறக்கிறான்.
அவன் தான் மகிஷாசுரன். அவனும் அவங்க அம்மாவைப் போலவே நீண்ட நாளா தவம் இருக்கிறான். சிவ பெருமான் கிட்ட போய் எக்கச்சக்கமா வரம் வாங்குறான். மைசூர் போய் ஆட்சி செய்றான். வரம் நிறைய வாங்குனதால இல்லாத அட்டூழியத்தை எல்லாம் பண்றான். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுக்கிறான்.
இதுக்கெல்லாம் என்ன காரணம்னா மகிஷாசூரன் முதல்லயே ஒரு பொண்ணு கையால தான் சாவேன்னு வரம் வாங்கிடறான். அதுவும் ஆணுக்கும் பொண்ணுக்கும் பொறக்காத ஒரு அதிசயமான பொண்ணு கையாலத் தான் சாவேன்னு வரம் வாங்கிடறான்.
கைலாசத்துல அம்மைக்கும், அப்பனுக்கும் சண்டை வந்துடுது. இதனால பூமிக்குப் போயி 8 மானிடப் பெண்களாக அட்டகாளிகளாகப் பொறப்பு எடுப்பாய் பார்வதின்னு சிவபெருமான் சாபத்தைப் போட்டுறாரு.
பார்வதி அம்மாவோ அதெல்லாம் நான் பூமிக்குப் போயி மனுஷியா எல்லாம் பொறக்க மாட்டேன்னு சொல்றாங்க. சிவபெருமான் படார்னு நெற்றிக்கண்ணைத் திறந்து பார்வதி அம்மாவை எரிச்சி எரிஞ்சிப் போன அவரோட பார்வதி உடம்பை 8 பிண்டங்களாகப் பிரிச்சிடறாரு. ரொம்ப காலமாக பிள்ளை வேணுமுன்னு தவம் கிடக்குற நாகக்கன்னி கிட்ட போறாரு. அந்த நாகக்கன்னிக்கிட்ட பார்வதி தேவியை 8 பிண்டங்களாகப் பிரிச்சி வச்சிருக்கிற உடம்பை சாப்பாடாக் கொடுத்துடறாரு.
அதை வாங்கி சாப்பிடற அந்த நாகக்கன்னி 8 முட்டைகளைப் போடுது. அந்த முட்டைகளை அடைகாத்து அதுல இருந்து 8 காளிமார்களைப் பெத்து எடுக்குது.
முதல்ல பிறந்தது முத்தாரம்மன், அடுத்ததாக வீரமனோகரி (பத்ரகாளி), முப்பிடாதி, உலகளந்தாள், அரியநாச்சி, வடக்கு வாசல் செல்வி (செண்பக வள்ளி), சந்தனமாரி, காந்தாரின்னு 8 காளிகள் பிறக்கிறாங்க.
இவங்க 8 பேரும் நாக லோகத்துலயே வாழ்றாங்க. அப்புறம் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து பிறப்போட ரகசியத்தைத் தெரிஞ்சிக்கிடறாங்க. அதுக்கு அப்புறமா மைசூருக்குக் கிளம்பிப் போயி மகிஷாசூரனைக் கொல்றாங்க.