இப்படி ரசிகர்களை புலம்ப விடலாமா ஜெயம் ரவி?.. அந்த டிரெய்லரை நம்பி போனதுக்கு.. இறைவன் விமர்சனம்!

By Sarath

Published:

இறைவன் விமர்சனம்:

ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், சார்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள், வன்முறை, ரத்தம், கொடூரமான கொலைகள் இருப்பதன் காரணமாக இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சென்சார் போர்டு ஏகப்பட்ட கட்களை போடச் சொல்லியும் அந்த காட்சியும் இல்லை என்றால் படத்தில் ஒன்றுமே இருக்காது என நினைத்த ஜெயம் ரவி ஏ சான்றிதழுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் என்றே தெரிகிறது.

இந்த படங்களை இயக்கியவரா இப்படி?

வாமனன், என்றென்றும் புன்னகை, உதயநிதி நடித்த மனிதன் படங்களை இயக்கிய அகமது பல ஆண்டுகள் கழித்து இயக்கியுள்ள படம் தான் இந்த இறைவன். திரில்லர் படம் என்பதால் டார்க் மோடிலேயே உருவாக்கி உள்ளனர். நயன்தாரா கூட கருப்பு நிற டார்க் ஆடைகளை அணிந்திருக்கிறார்.

பிரம்மா எனும் கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் படத்தில் நடித்து மிரட்டிய பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் இந்த படத்தில் சைக்கோ வில்லனாக முதல் பாதியில் மிரட்டுகிறார். விஷ்ணு விஷாலின் ராட்சசன், சமீபத்தில் வெளியான போர் தொழில் உள்ளிட்ட படங்களில் ஒரு வில்லனுக்கு பதில் இரண்டாவது சைக்கோ வில்லனை காட்டி ட்விஸ்ட் வைக்கும் அதே பழைய ஃபார்முலாவை இந்த இறைவன் படத்திலும் செய்துள்ளனர்.

டிரைலரை காட்டி ஏமாத்திட்டாங்க:

அதன் காரணமாகவே, சைக்கோ கொலைகாரன் படங்களில் வரும் சீட் எட்ஜ் திரில்லர் போர்ஷன் ரொம்பவே மிஸ் ஆகிறது. நயன்தாராவுக்கு இந்த படத்தில் பெரிதாக எந்த ஒரு கோப்பையும் இயக்குனர் அகமது திரைக்கதையில் எழுதவே இல்லை. அதன் காரணமாக இந்த படத்தில் நடித்ததையே மறந்து விட்டாரா நயன்தாரா என்கிற கேள்வியும் எழுகிறது. கடைசி நேரத்தில் ஒரே ஒரு போஸ்டரை மட்டும் வெளியிட்டு ப்ரோமோஷன் செய்திருந்தார். ஆனால் அதுவும் இறைவன் படத்துக்கு எந்த வகையிலும் உதவி செய்யுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

இறைவன் படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மார்க் ஆண்டனி படத்தை போல வரவர ட்ரைலரை காட்டி ரசிகர்களை படக்குழுவினர் ஏமாற்றி வருகின்றனரா என்கிற கேள்வியும் இருக்கிறது. ஒன் டூ த்ரீ, ஒன் டூ த்ரீ என மிரட்டிய டிரெய்லர் அளவுக்கு கூட படம் வொர்த்தாக இல்லை என்பது ஜெயம் ரவி ரசிகர்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஏ சான்றிதழ் இருக்கேன்னு நம்பி போன த்ரில்லர் ரசிகர்களுக்கும் பெரிதாக த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்காமல் மண்டையை காயவைத்து அனுப்பி விட்டார் இயக்குநர் அகமது. யுவன் சங்கர் ராஜாவை அந்த சுத்தியலில் அடித்தது போன்ற புரமோவை வெளியிட்ட நிலையில், இயக்குநரை சுத்தியல் கொண்டு அடிக்க ஜெயம் ரவியின் ரசிகர்களே வெறித்தனமாக தேடி வருகின்றனர்.

இறைவன் – இரக்கமில்லையா

ரேட்டிங் – 2/5.