நம்ம முன்னோர்கள் எதை செஞ்சாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படி கொண்டாடப்படுவது தான் இந்த விநாயகர் சதுர்த்தி. ஆன்மிகம் ஒருபுறம் இருந்தாலும் அறவியலும் இதில் உள்ளது. அப்படி இதுல என்ன தான் விசேஷம்னு பார்க்கலாமா…
விநாயகர் சதுர்த்தியை ஆதிகாலம் முதலே கொண்டாடி வருகிறார்கள். என்றாலும் அதை மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் தேசிய விழாவாக பிரபலப்படுத்தியவர் தேசபக்தி கொண்ட தியாகி பாலகங்காதர திலகர் தான்.
1893ல் விநாயகர் சதுர்த்தியை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று முதன் முதலில் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் உள்ள கணபதி கோயிலில் தான் முதன்முதலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை அடித்துச் சென்று விடும். அதனால் அவ்விடத்தில் நீர் நிலத்தில் தங்காமல் கடலை சென்று அடைந்து விடும்.
இதனால் அந்த இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடும். இதற்கு என்ன தான் வழி என்று நம் முன்னோர்கள் யோசித்தார்கள். நீர் கடலில் கலப்பதைத் தடுக்கக் கெட்டியான களிமண்ணை ஆற்றில் கரைத்தால் ஆற்று நீர் அங்கு தங்கி விடும்.
நிலத்தடி நீரையும் உயர்த்தி விடும் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது. அதனால் தான் ஆடிப்பெருக்கை அடுத்து வரும் சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடி வருகின்றனர். அன்று களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வணங்கி வழிபாடு செய்து ஆற்றில் கரைத்து விடுகின்றனர்.
விநாயகர் சிலைகளை சதுர்த்தி அன்றே கரைத்தால் அன்று களிமண்ணால் ஆன சிலைகள் ஈரமாக இருக்கும். அப்படி கரைத்தால் அந்த மண்ணும் ஆற்று நீரில் அடித்துச் சென்று விடும் என்பதால் 3 மற்றும் 5ம் நாளில் அது காய்ந்த உடன் கரைக்கின்றனர். அப்போது தான் களிமண் ஆற்றின் அடியில் தங்கும். அதனால் அந்த நீர் களிமண்ணால் உறிஞ்சப்பட்டு நிலத்தடியில் தங்கி விடும்.
எவ்வளவு நுட்பமான மதிகொண்டு நம் முன்னோர்கள் அன்றே செயல்பட்டுள்ளனர் என்பதற்கு இன்று கொண்டாடும் விநாயகர் சதுர்த்தியே சாட்சி.