ஒரு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் என டைட்டில் போடும்போது ரசிகர்கள் கைதட்டினார்கள் என்றால் அது எம் கர்ணனுக்கு மட்டுமே. அந்த அளவுக்கு அவர் கேமராவில் மாயாஜால வித்தை காட்டி இருப்பார். குறிப்பாக சண்டை காட்சிகளில் அவர் ஹாலிவுட் பாணியில் மிகவும் குளோசப் ஷாட்டுகள் வைத்திருப்பார்.
எம் கர்ணன் அவர்களுக்கு கடற்படையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்று தான் ஆசை இருந்தது. ஆனால் அவரது தந்தை ஒரே மகனை வெகு தூரத்திற்கு அனுப்ப விரும்பவில்லை. அதனால் தனக்கு தெரிந்த ஒளிப்பதிவாளரிடம் உதவி ஒளிப்பதிவாளராக வேலைக்கு சேர்த்து விட்டார்.
சில வருடங்கள் கழித்து ஒளிப்பதிவில் வித்தை காட்டிய பி என் சுந்தரம் அவர்களிடம் உதவியாளராக எம். கர்ணன் பணியாற்றிய போது பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். இந்த நிலையில் தான் அவருக்கு தனியாக ஒளிப்பதிவு செய்வதற்கு சில வாய்ப்புகள் வந்தது.
எம்ஜிஆர் அறிமுகமான படத்தில் அறிமுகம்.. 1000 படங்களுக்கும் மேல் நடித்த தங்கவேலுவின் கதை..!

சிவாஜி கணேசன் நடித்த சபாஷ் மீனா என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்த அவர் அதன் பிறகு தங்க ரத்தினம், சாரதா, கற்பகம், நீலவானம் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். அப்போது திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசை எம்.கர்ணன் அவர்களுக்கு இருந்தது.
ஆனால் அதிரடி ஆக்சன் படத்தை ஹாலிவுட் பாணியில் இயக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் பிறகு இயக்கிய அதிரடி ஆக்சன் படம் தான் கங்கா. கெளபாய் பாணியில் உருவான இந்த படத்தில் ஜெய்சங்கர் மற்றும் ராஜ கோகிலா நடித்திருந்தனர். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதன் பிறகு ஜக்கம்மா மற்றும் எங்க பாட்டன் சொத்து ஆகிய படங்களை எம் கர்ணன் இயக்கினார். எங்க பாட்டன் சொத்து படத்தில் ஜெய்சங்கர் மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு கதாநாயகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சண்டை காட்சிகளில் கேமராக்களை ஸ்டண்ட் நடிகர்கள் இடையே புகுத்தி விளையாடுவார் கர்ணன். அவரது கேமரா கோணமே வித்தியாசமாக இருக்கும். ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே இந்த படத்திற்கு எம் கர்ணன் தான் ஒளிப்பதிவாளர் என ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள், அந்த அளவுக்கு அவருடைய ஒளிபதிவு வித்தியாசமாக இருக்கும்.
எங்க பாட்டன் சொத்து படத்திற்கு பிறகு அவரது இயக்கத்தில் வெளியான ஒரே வெற்றி படம் ஜம்பு. இந்த படத்திலும் ஜெய்சங்கர் தான் நடித்திருப்பார். இதுவும் ஒரு கெளபாய் பாணியில் உருவான படம் தான். அதன் பிறகு அவரது இயக்கத்தில் உருவான சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் எம் கர்ணன் விஜய் சித்ரா என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பெண்ணை வாழ விடுங்கள் என்ற படத்தை தயாரித்தார். ஜெய்சங்கர், கே ஆர் விஜயா நடித்த இந்த படமும் சுமாரான வெற்றியே பெற்றது.
தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளை அதுவரை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்த நிலையில் கர்ணன் தான் முதல் முதலாக பல ரிஸ்க்கான ஷாட்களை வைத்து ஆங்கில படங்களுக்கு இணையாக பேச வைத்தார். அதே போல் லொகேஷன் தேர்வும் மிகவும் சிறப்பாக அமைத்து இருப்பார். பார்த்து பழக்கப்பட்ட இடங்களில் படமாக்காமல் புதுமாதிரியான இடத்தை பார்வையாளர்களுக்கு காட்டி பிரமிக்க வைத்தார் கர்ணன்.
சிவாஜியின் நவராத்திரி படத்தை வைத்து தான் எம்.ஜி.ஆருக்கு நவரத்தினம் படம் எடுத்த இயக்குனர்..!!
குறிப்பாக பனிச்சறுக்கு செய்யும் இடம், அருவிகளுக்கு இடையே சண்டை, புழுதி மண் பறக்கும் குதிரை, சர் சர்ரென பறக்கும் பைக் சண்டை காட்சிகளை எடுத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருப்பார். இன்றும் கர்ணன் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது மக்கள் ரசித்து பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
