தங்கப்பதக்கம் முதல் துருவ நட்சத்திரம் வரை… நடிகர் செந்தாமரையின் திரையுலக பயணம்..!!

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகின் வில்லன், குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் செந்தாமரை. இவர் நடித்த இரண்டில் ஒன்று என்ற நாடகம் தான் சிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம் என்ற படமானது. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்பட பல பிரபலங்களுடன் செந்தாமரை நடித்துள்ளார்.

மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த இவரது படங்கள் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றது. நடிகர் செந்தாமரை, காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் பிறந்தவர். இவரது எதிர் வீட்டில் தான் அறிஞர் அண்ணா இருந்தார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் அதன் பின்னர் அண்ணாவிடம் இருந்த நட்பு காரணமாக அண்ணா அவரை கருணாநிதியிடம் அனுப்பி வைத்தார். கருணாநிதி எம்.ஜி.ஆரிடம் சிபாரிசு செய்ய எம்ஜிஆர் தனது நாடக மன்றத்தில் இணைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர் நடத்திய பல நாடகங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

ரஜினி பட வில்லன் நடிகர் செந்தாமரையின் ரகசிய காதல் கதை! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அறிய தகவல்கள்!

senthamarai3

இதனை அடுத்து சொந்தமாக நாடக கம்பெனியை தொடங்கிய செந்தாமரை பல நாடகங்களை அரங்கேற்றினார். அதில் ஒன்றுதான் இரண்டில் ஒன்று. கம்பீரமான காவல்துறை வேடத்தில் செந்தாமரை நடித்து அசத்தினார். இந்த நாடகம் மிகப்பெரிய அளவில் மக்கள் வரவேற்பு பெற்றபோதுதான் ஒருநாள் இந்த நாடகத்தை சிவாஜி கணேசன் பார்க்க வந்தார். அப்போது இந்த நாடகத்தை பார்த்து ஆச்சரியமடைந்த அவர் இது தான் நடிக்க வேண்டிய கதை அல்லவா என நினைத்து செந்தாமரையிடம் இதன் உரிமையை கேட்டார்.

சிவாஜி கேட்டதால் மறுக்காமல் உடனே அதன் உரிமையை கொடுத்தார். அதன் பிறகு சிவாஜி கணேசன் நடிப்பில் இந்த நாடகம் தங்கப்பதக்கம் என்ற பெயரில் ஒரு சில மாற்றங்கள் செய்து அரங்கேறின. சென்னையில் உள்ள பல நாடக சபாக்கள் இந்த நாடகத்தை அரங்கேற்ற போட்டி போட்டன. அதன் பிறகு திரைப்படமாகவும் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நாடகத் துறையில் மிகப்பெரிய சாதனை செய்த செந்தாமரை முதல் முறையாக ‘மாயா பஜார்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்தார். அதன் பின் நல்ல தீர்ப்பு, வண்ணக்கிளி போன்ற படங்களில் நடித்த அவர் தெய்வத்தாய் மற்றும் தொழிலாளி, ஆசை முகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.

ரஜினிக்கே டஃப் கொடுத்த ரகுவரன்…. ரசிகர்கள் ரசித்த வில்லன்…. வீட்டில் எப்படி இருப்பார் தெரியுமா….?

senthamarai2

1970களில் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன, அதில் பெரும்பாலும் இவர் வில்லன் கேரக்டரில் நடித்தார். சிவாஜியுடன் எங்க மாமா, ராமன் எத்தனை ராமனடி, வியட்நாம் வீடு, அருணோதயம், சுமதி என் சுந்தரி, பாபு உள்பட பல படங்களில் நடித்தார்.

அதேபோல் ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன், கழுகு, தனி காட்டு ராஜா, மூன்று முகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மூன்று முகம் படத்தில் இவரது கேரக்டர் மிக அபாரமாக இருக்கும். ஏகாம்பரம் என்ற கேரக்டரில் இவர்தான் அலெக்ஸ் பாண்டியன் என்ற ரஜினியின் கேரக்டரை கொல்வார்.

அதன் பிறகு பாக்யராஜுடன் டார்லிங் டார்லிங் மற்றும் தூறல் நின்னு போச்சு ஆகிய படங்களில் நடித்தார். தூறல் நின்னு போச்சு திரைபடத்தில் நாயகி சுலக்சனாவின் அப்பாவாக ஒரு பிடிவாதக்காரராக நடித்திருப்பார். பாக்யராஜ் – சுலக்சனா திருமணத்திற்கு சம்மதிக்காத அவர் கடைசி நேரத்தில் உயிரை விடும்போது இருவரையும் இணைத்து வைக்கும் காட்சி நெகிழ வைத்து இருக்கும்.

மேலும் கமல்ஹாசனின் காக்கி சட்டை, ரஜினியின் ஸ்ரீ ராகவேந்தர், படிக்காதவன், டி.ராஜேந்தரின் மைதிலி என்னை காதலி, ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் மற்றும் கலைஞர் வசனத்தில் உருவான நீதிக்கு தண்டனை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

90களில் வயது முதிர்வு காரணமாக இவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார், இருந்தாலும் அவர் ரஜினியின் பணக்காரன், பாக்யராஜின் ருத்ரா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார்

senthamarai1

நடிகர் செந்தாமரை 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் நடித்து பாதியிலேயே விட்டுப்போன படமான அர்ஜுன் நடித்த துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் அவரது மறைவுக்குப் பின் வெளியானது. இதுதான் அவரது கடைசி படம்.

ரஜினி – பாலசந்தர் – விசு என மும்மேதைகள் பணியாற்றிய படம்.. வில்லன் நடிப்பில் அதகளப்படுத்திய நெற்றிக்கண்!

நடிகர் செந்தாமரைக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவர் பல தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 70-கள் மற்றும் 80-ம் ஆண்டுகளில் வில்லன் கேரக்டர் என்றால் உடனே செந்தாமரையை கூப்பிடுங்கள் என்ற அளவுக்கு அவர் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.