விஜயகாந்த் நடித்த படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. விஜயகாந்த் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜயகாந்தின் முதல் வெற்றி படம் என்றும் இந்த படத்தை கூறலாம். இந்த படம் தான் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அந்தா கானூன்’ என்ற டைட்டிலில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திற்கு முந்தைய படங்களில் விஜயகாந்த் நடிப்பு சுமாராகத்தான் இருக்குமாம், அது மட்டுமின்றி அவரது படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதேபோல் அப்போது வளர்ந்து வரும் இயக்குனராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்தார். அவர் இயக்கிய சில படங்களும் சுமாராகவே ஓடியது.
எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்: 100வது பட பரிதாபங்கள்!
எனவே இருவருக்கும் ஒரு வெற்றி தேவை என்ற நிலையில் இருவரும் இணைந்த திரைப்படம்தான் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, சென்னையில் நூறாவது நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த படத்தின் கதைப்படி சிறுவயதில் கொலை செய்த மூன்று பேரை விஜயகாந்த் பார்ப்பார். அதை அவர் காவல் நிலையத்தில் கூறுவார். ஆனால் அந்த மூன்று பேரும் சிறையில் இருக்கின்றார்கள், அவர்கள் எப்படி கொலை செய்ய முடியும் என்று அந்த வழக்கை காவல்துறையினர் ஏற்க மாட்டார்கள். இதனையடுத்து வளர்ந்து பெரியவனாகிய பின் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு மூன்று கொலைகாரர்களையும் எந்தவித தடயமும் இல்லாமல் விஜயகாந்த் கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்வார்.
விஜயகாந்தின் அக்கா தான் காவல்துறை அதிகாரி. அந்த மூன்று கொலைகாரர்களுக்கும் சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறுவார். நீயே அவர்களை கொன்றால் நானே உன்னை கைது செய்வேன் என்று கூறுவார். இருவருக்கும் இடையிலான பாச போராட்டம் ஒருபுறமிருக்க, மூன்று வில்லன்களையும் கொல்ல வேண்டும் என்ற நிலையில் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.
விஜயகாந்த் இந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக பூர்ணிமாதேவி நடித்திருந்தார். வசுமதி என்பவர் தான் விஜயகாந்தின் அக்காவாக காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். சங்கிலி முருகன் குழுவினர் வில்லன்களாக நடித்திருப்பார்கள்.
ஒரே தீபாவளிக்கு வந்த 2 விஜயகாந்த் படங்கள்.. இரண்டுமே தோல்வி..!
இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்துதான் விஜயகாந்த் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் தொடர்ந்து பல படங்களில் பணிபுரிந்தனர். இந்த படத்தின் கதையை எஸ்.ஏ.சந்திரசேகர் மனைவி ஷோபா எழுதியிருந்தார்.
இந்த படத்தை ஹிந்தியில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. விஜயகாந்த் வேடத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்தின் அக்கா வேடத்தில் ஹேமாமாலினி ஆகியோர் நடிக்க அமிதாப்பச்சன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் உருவாக்கப்பட்டு, ரஜினிக்கு பாலிவுட் திரை உலகின் என்ட்ரியாக அமைந்தது. இந்த படம் நல்ல வெற்றி பெற்றது.
வெறும் 2 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 7 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஹிந்தியில் பிரபலமாக இருந்த லட்சுமி காந்த் பியாரிலால் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். 1983ஆம் ஆண்டு வந்த ‘அந்தா கானூன்’ என்ற இந்த திரைப்படம் ரஜினிகாந்த், ஹேமாமாலினிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
விஜயகாந்த் நடித்த வெற்றி படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடித்தார் என்ற தகவலே இன்றைய சினிமா ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் நிலையில், இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது என்ற தகவலும் புதியதாகத்தான் இருக்கும்.