விபத்தில் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து நடன கலையில் சாதனை செய்து, திரைப்படங்களிலும் நடித்து சாதனை செய்தவர்தான் நடிகை சுதா சந்திரன்.
நடிகை சுதா சந்திரன் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அவருடைய முன்னோர்கள் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியை சேர்ந்தவர்கள். அவர் உலகம் முழுவதும் பல நகரங்களுக்கு நடன கலைக்காக நடன நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தாலும் தனக்கு பிடித்த ஊர் சென்னை தான் என்றும் சென்னைதான் என் மனதிற்கு அமைதியை தரும் என்றும் கூறியுள்ளார்.
ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!
மும்பையில் பிறந்து வளர்ந்த அவர் மும்பையில்தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். ஆனால் தமிழகத்தில்தான் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. தமிழகத்தில் நடன நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த நிலையில், திருச்சியில் சுதா சந்திரன் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானது.
முதலில் லேசான காயம் என்று நினைத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால் அதன் பின்னர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோதுதான் அவரது வலது காலை எடுக்க வேண்டிய நிலை வந்தது. அதுதான் வாழ்நாளில் மிகவும் கடினமான நாள் என்று அவர் கூறியிருந்தார். விபத்தில் காலை இழந்தாலும் தொடர்ந்து மரக்கட்டை கால் வைத்து நடன பயிற்சி ஈடுபட்டார். அதன் பின்னரும் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில்தான் 1984ஆம் ஆண்டு மயூரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் நடன நிகழ்ச்சிப் பற்றிய கதை அம்சம் கொண்டது என்பதால் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு தமிழில் சர்வம் சக்திமயம் என்ற பக்தி படத்தில் அறிமுகமானார். அந்த படத்தை அடுத்து அவர் நம்பினார் கெடுவதில்லை, வசந்த ராகம், சின்னத்தம்பி பெரியதம்பி, தாயே நீயே துணை உள்பட பல படங்களில் நடித்தார். ஒரு சில படங்களில் நாயகியாகவும், சில படங்களில் துணை நாயகி ஆகவும் நடித்தார்.
கமல், ரஜினியுடன் வெற்றிப்படங்கள்.. 33 வயதில் திடீரென மாறிய நடிகை மாதவி..!
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ஹிந்தி வாய்ப்புகள் வந்ததால் பின்னாளில் அவர் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
நடிகை சுதா சந்திரன், இயக்குனர் ரவி டங் என்பவரை கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் அவர் பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ஆர்.கே.சுரேஷ் நடித்த விசித்திரன் என்ற திரைப்படத்தில் கூட வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் மட்டுமின்றி இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார். முக்கியமாக ஹிந்தி தொலைக்காட்சி தொடரான நாகின் என்ற தொடரில் யாமினி என்ற கேரக்டரில் இவர் அசத்தலாக நடித்திருப்பார். மேலும் தமிழில் உருவான தொலைக்காட்சி தொடர்களான ஜெயம், கலசம், சௌந்தரவல்லி, சூரிய புத்திரன், தெய்வம் தந்த வீடு, லட்சுமி ஸ்டோர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
அதேபோல் அவர் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். தமிழில் சொல்வதெல்லாம் உண்மை, டான்ஸ் ஜோடி டான்ஸ், டான்சிங் கில்லாடிஸ் உள்பட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். அதுமட்டுமின்றி ஹிந்தி பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியிலும் அவர் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.
எம்ஜிஆர், சிவாஜியுடன் திரையுலகில் உச்சம்.. திடீரென சிஏ ஆடிட்டராகி லட்சக்கணக்கில் சம்பாதித்த நடிகை..!
முதல் படமான மயூரி என்ற திரைப்படத்திற்கு சிறப்பாக நடித்தற்காக அவருக்கு சிறப்பு ஜூரி தேசிய விருது கிடைத்தது. அதேபோல் ஆந்திர மாநில நந்தி விருது உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். விபத்தில் காலை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் நடனத்துறையிலும், திரைப்படத்துறையிலும் அவர் பல்வேறு சாதனை செய்து இன்றும் தொடர்ந்து அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.