உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு சில இயக்குனர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பார் என்பதும் அவர்களுடன் இணைந்து அடிக்கடி பணியாற்றுவார் என்பது தெரிந்ததே. குறிப்பாக கே.பாலச்சந்தரின் பெரும்பாலான படங்களில் கமல்ஹாசன் ஒரு சில காட்சிகளிலாவது நடித்திருப்பார்.
அதுபோல் கமல்ஹாசனை வைத்து பல படங்களை பாலச்சந்தர் மட்டுமின்றி ஒரு சில இயக்குனர்கள் தொடர்ச்சியாக இயக்கிக் கொண்டிருந்தனர். அந்த வகையில் கமல்ஹாசனுடன் கெமிஸ்ட்ரி சரியாக பொருந்திய இயக்குனர்களில் ஒருவர் தான் சிங்கீதம் சீனிவாச ராவ்.
வசனமும் இல்லை, பாடலும் இல்லை.. கமல்ஹாசனின் ஒரு வித்தியாசமான முயற்சி..!
இவர் தெலுங்கு படங்களை அதிகம் இயக்கி இருந்தாலும் தமிழில் ‘திக்கற்ற பார்வதி’ என்ற திரைப்படத்தை கடந்த 1974ஆம் ஆண்டு இயக்கினார். ராஜாஜி கதையில் உருவான இந்த படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமி நடித்திருந்தார்கள். இந்த படம் தேசிய விருது பெற்றது.
ஆனாலும் இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் தமிழ் பக்கம் வரவே இல்லை என்பது தான் பெரும் சோகம். ஆனால் இவரை தமிழுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்தது கமல்ஹாசன் தான் என்றால் அது மிகையாகாது.
கடந்த 1981ஆம் ஆண்டு வெளியான ராஜ பார்வை படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் மீண்டும் தமிழுக்கு வந்தார். கமல்ஹாசன் தயாரித்து, நடித்த இந்த படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக அழகாக செதுக்கப்பட்டிருந்தது. ஆனால் வசூல் அளவில் இந்த படம் தோல்வி அடைந்தது. இருப்பினும் கமல்ஹாசன் இந்த படத்தால் தனக்கு முழு திருப்தி என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து கமல்ஹாசன் மீண்டு வர கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆனதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் 1989ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிகிதம் சீனிவாச ராவ் மீண்டும் தமிழுக்கு வந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘மைக்கேல் மதன காமராஜன்’ என்ற படத்தையும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார். நான்கு கமல்ஹாசன் கொண்ட இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்டது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட கமல்ஹாசன் படம்.. இப்படி ஒரு திகில் படம் இனி வருமா?
இந்த இரண்டு படங்கள் பெற்ற மாபெரும் வெற்றியை அடுத்து 1994ஆம் ஆண்டு ‘மகளிர் மட்டும்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் கமல்ஹாசன் கடைசி 10 நிமிடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ரேவதி, ஊர்வசி மற்றும் ரோகிணி முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டாகியது.
இதனையடுத்து கமல்ஹாசன், இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் ஆகிய இருவரும் இணைந்து பணிபுரிந்த படம் ‘காதலா காதலா’. கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா உள்ளிட்டவர்கள் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இதன் பிறகு 2005ஆம் ஆண்டு இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்தார். இந்த படத்தை இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் தான் இயக்க வேண்டும் என்று கமல் பிடிவாதமாக இருந்ததாகவும், ஆனால் இந்த படத்தை இயக்குவதற்கு இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் அவர்களுக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டாலும் கமல்ஹாசனுக்காக இயக்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?
கமல் மற்றும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் ஆகிய இருவரும் இணைந்து ஆறு படங்களில் பணியாற்றியுள்ளனர். அதில் ராஜ பார்வை, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் தவிர மற்ற 4 ப்டங்களும் சூப்பர் ஹிட்டானது.