பெற்றோர்கள் குழந்தைகள் முன்பு எப்பொழுதும் மிக கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். சமுதாயத்தில் குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அடித்தளமாய் இருப்பது குடும்பம் தான். மேலும் எப்போதும் குழந்தைகள் பெற்றோர்களை தான் தங்களின் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வார்கள்.
அதனால் எந்த செயலை செய்யும் பொழுதும், பேசும் பொழுதும் நம் செயல்களிலும் வார்த்தைகளிலும் அதிக கவனம் இருத்தல் அவசியம். குறிப்பாக இந்த 9 விஷயங்களை எப்பொழுதும் குழந்தைகள் முன்பு செய்யவோ, பேசவோ கூடாது அது என்னென்ன என்பதை பார்ப்போம்.
குழந்தைகள் முன்பு செய்யவே கூடாத ஒன்பது விஷயங்கள்:
1. பெற்றோர்களுக்கு இடையில் சண்டை போடுதல்:
பெற்றோர்கள் எல்லா நேரத்திலும் ஒருமித்த கருத்துக்களோடு இருக்க இயலாது. பெற்றோர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் அல்லது மாற்றுக் கருத்துக்கள் ஏற்படுவது இயல்பு. அது குறித்து உங்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்படலாம். ஒரு விஷயத்தை குழந்தைகள் முன்பு ஆரோக்கியமான முறையில் கலந்துரையாடுவது தவறல்ல. ஆனால் அதிகப்படியான வாக்குவாதம், சண்டை ஆகியவற்றை குழந்தைகள் முன்பு செய்வதை அறவே தவிர்த்து விடுங்கள். உங்களின் கருத்து வேறுபாடுகள் உங்களுக்குள் மட்டும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் முன்பு சண்டை போடுவது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
2. குழந்தைகளின் உருவத்தை கேலி செய்தல்:
சில பெற்றோர்கள் செல்லமாக அழைப்பதாக நினைத்து குழந்தைகளின் உயரத்தையோ, உருவத்தையோ கேலி செய்வது போல பெயர் வைத்து அழைப்பது உண்டு. உங்கள் குழந்தையை நீங்களே எப்பொழுதும் உருவ கேலி செய்யாதீர்கள். அது குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிடும். அவர்கள் முன்பு மற்றவர்களையும் நீங்கள் உருவ கேலி செய்யக்கூடாது இது தவறான மனப்பான்மையை உண்டாக்கும்.
பெற்றோர்களே குழந்தையை அடித்து வளர்க்கும் முறை சரியானதா???
3. பிறரைப் பற்றி குறை பேசுதல்:
அடுத்தவர்களைப் பற்றி குறை பேசுதல், புரணி பேசுதல் போன்றவை குழந்தைகள் முன்பு வேண்டாம். உங்கள் உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ பற்றி குழந்தைகள் முன்பு நீங்கள் பேசினால் அடுத்த முறை அந்த நபரை பார்க்கும் பொழுது நீங்கள் பேசியது தான் அவர்களுக்கு மனதில் தோன்றும். நீங்கள் சொல்லும் கருத்துக்கள் ஆழ அவர்கள் மனதில் பதிந்து விடும். பின்பு அவர்களும் மற்றவர்களிடம் குறை காணத்தான் தொடங்குவார்கள்.
4. படிப்பில் குறை கூறிக் கொண்டே இருப்பது:
“நீ படிப்பதற்கே லாயக்கில்லை, உனக்கு படிப்பே வராது” போன்ற அவர்கள் கல்வி குறித்து அவர்களுக்கே எதிர்மறை சிந்தனைகள் வரும்படி கருத்துக்களை கூறக்கூடாது. அவர்களுக்கு எந்த பாடம் நன்கு வருகிறதோ அல்லது எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டுமே தவிர அவர்கள் எதற்குமே தகுதியானவர்கள் இல்லை என்ற எண்ணத்தை வளர்த்து விடக் கூடாது.
5. அனைத்திற்கும் கிண்டலாய் பேசுதல்:
குழந்தைக்கு நக்கல் பேச்சு, கிண்டல் பேச்சு என்பது புரியாது. ஏதோ நம்மை குறை சொல்கிறார்கள் என்று தன் நினைத்துக் கொள்வார்கள். சில குழந்தைகளுக்கு மழலை பேச்சு மாற சில காலம் எடுக்கும் அப்படி மழலையாய் பேசும் குழந்தைகளையோ அல்லது குழந்தைகளின் எழுத்தை வைத்தோ, அவர்களின் செயல்களை வைத்தோ நக்கல் செய்வது கூடாது.
6. அதிக அளவு தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துதல்:
பெற்றோர்கள் குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்க்கிறார்கள், தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்று கூறுவது உண்டு. குழந்தையின் முன்பு முதலில் பெற்றோர்கள் மொபைல், டிவி, மடிக்கணினி ஆகியவற்றை அதிக நேரம் உபயோகிப்பதை குறைக்க வேண்டும். கூடுமானவரை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும்.
7. பிற குழந்தைகளுடன் ஒப்பிடுவது:
உங்கள் குழந்தையை பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. உங்களின் அண்டை வீட்டு குழந்தைகளுடனோ அல்லது உறவினர் குழந்தைகளுடனோ அல்லது உங்களின் மற்ற குழந்தைகளுடனோ ஒப்பிட்டு எப்பொழுதும் பேச வேண்டாம். இன்னும் சில உறவினர்கள் உங்களின் இரண்டு குழந்தைகளையே ஒப்பிட்டு பேசுவார்கள் “தங்கை அளவுக்கு அக்கா நிறம் இல்லை”, “அண்ணனை விட தம்பி நல்ல உயரம்” என்று பேச கேட்டிருப்பீர்கள். இப்படி உங்கள் குழந்தை முன்பு பேச ஒருபோதும் அனுமதிக்காதீர்கள் அது அவர்களிடம் தாழ்வு மனப்பான்மை உணர்வை அதிகமாகிவிடும்.
8. தகாத வார்த்தைகளை பேசுவது:
கோபம் மனிதனுக்கு ஏற்படக்கூடிய மிக முக்கியமான உணர்வு. ஆனால் அந்தக் கோபம் வரும் வேளையில் என்ன செய்கிறோம் என்ற நிதானம் இருக்க வேண்டும். கோபத்தில் உங்களின் வாழ்க்கைத் துணையையோ அல்லது நண்பர்களையோ தகாத வார்த்தையில் எப்பொழுதும் திட்டக்கூடாது. உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
9. புகைப்பிடித்தல், மது அருந்துதல்:
புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்க வழக்கங்களை ஒருபோதும் குழந்தைகள் முன்பு செய்து விடாதீர்கள். அறியாத பருவத்தில் அது என்ன என்று முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் தோன்றிவிடும். நீங்கள் குழந்தைகள் முன்பு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரானால் அது உங்கள் உடல் நலனை மட்டும் இல்லாமல் அந்த குழந்தையின் உடல் நலனையும் சேர்த்து பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா, சுவாச பிரச்சனை, காதுகளில் தொற்று போன்ற பல வியாதிகளுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை நீங்களே சிதைத்து விடக்கூடாது.
பெற்றோர்களே குழந்தை வளர்ப்பில் இவற்றில் கவனம் செலுத்த தவறி விடாதீர்கள்…!
இதை படிக்கையில் இவை எப்படி சாத்தியம்? என் வீட்டில் நான் சுதந்திரமாக இருக்கக் கூடாதா? தோன்றியதை செய்யக்கூடாதா? இதை எப்படி பின்பற்ற முடியும்? என்று தோன்றலாம். நல்ல பெற்றோராக இருக்க சில விஷயங்களில் பயிற்சி அவசியம். குழந்தைகள் முன்பு நாம் நடந்து கொள்ளும் விதத்தில் கவனம் செலுத்த ஆரம்பத்தில் சிரமமாய் தோன்றினாலும் விடாமல் பயிற்சி செய்தால் சிறந்த பெற்றோராக இருக்க முடியும். மேலும் உங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக திகழலாம். உங்கள் குழந்தைக்கு நல்ல சத்தான உணவுகளை கொடுப்பது, விலை உயர்ந்த ஆடைகளை வாங்கிக் கொடுப்பது, மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வைப்பது இவை மட்டும் உங்களின் கடமையல்ல. அவர்களை இந்த சமுதாயத்தின் முன்பு ஒரு நல்ல மனிதர்களாக உருவாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் உங்களிடம் தான் உள்ளது.