பெற்றோர்களே குழந்தை வளர்ப்பில் இவற்றில் கவனம் செலுத்த தவறி விடாதீர்கள்…!

உளவியல் ஆராய்ச்சியாளர்களால் அதிக அளவு ஆராய்ச்சி செய்யப்படக்கூடிய ஒரு பகுதி தான் குழந்தை வளர்ப்பு முறை. குழந்தை வளர்ப்புக்கான யுக்திகள், பயிற்சிகள் இப்படி அவர்களுடைய ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

பெரும்பாலான பெற்றோர்கள் தன்னுடைய குழந்தை அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும். எந்தவிதமான குறைகளும் இல்லாமல் எல்லாவற்றிலுமே முழு நிறைவு பெற்றவர்களாக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படுகிறது.

பெற்றோர்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு எல்லா குழந்தைகளும் முழுநிறைவு பெற்ற குழந்தைகளாக இருக்க முடியாது. பிழைகளிலிருந்து தான் அவர்கள் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

அதே போல பெற்றோர்களிளும் அனைத்து பெற்றோர்களும் முழுநிறைவு பெற்றவர்கள் அல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு.

பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளை நாம் பார்க்கலாம்.

 

முன்னுதாரணமாக திகழுதல்

அனைத்து குழந்தைகளுக்கும் முதல் ஆசிரியர் அவர்களுடைய பெற்றோர்கள் தான். இதை செய் இதை செய்யக்கூடாது, இதை சொல் இதைச் சொல்லக்கூடாது, இப்படி நடக்கலாம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று நாம் எவ்வளவுதான் வலியுறுத்தி சொன்னாலும் அந்த குழந்தைகள் பின்பற்றப் போவது என்னவோ நாம் என்ன செய்கிறோமோ அதைத்தான். பெற்றோர்கள் செய்வதை தான் அவர்களின் குழந்தைகளும் பின் தொடர்வார்கள். எனவே நம் குழந்தை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அது போல் முதலில் நாம் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அறியாமலே நம்மை பின்பற்ற தொடங்கி விடுவார்கள்.

அன்பு காட்டுதல்

 

எனக்கு கிடைக்காதது அனைத்தும் என் குழந்தைக்கு கிடைக்க வேண்டும். என் குழந்தை என்ன ஆசைப்படுகிறதோ அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணுகிற பெற்றோர்கள் ஒரு பக்கம் இருக்க.. கண்டிக்காமல் வளர்த்தால் சரிவராது; அடியாத மாடு படியாது என்று குழந்தைகளுடன் கண்டிப்பை மட்டுமே காட்டி வளர்க்கும் பெற்றோர்களும் மறுபக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த இரண்டு நிலையுமே தவறுதான் உங்கள் குழந்தைகளுக்கான அன்பை பொருட்களின் மூலம் தான் காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை நீங்கள் காட்டும் அன்பு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதாக இருக்க வேண்டும் நமக்கு என்ன நடந்தாலும் நம் பெற்றோர்கள் உடன் இருக்கிறார்கள் என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு தர வேண்டும்.

நேரம் செலவழித்தல்

family

நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகச்சிறந்த பரிசு நேரம் மட்டும்தான். உணவு உண்ணும் போது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் அமையும் அமர்ந்து அந்த குழந்தைகளுடன் சேர்ந்து உணவு உண்ணுதல்; குழந்தையை அமர வைத்து அவர்களுடன் மகிழ்ச்சியுடனும் நேர்மறையான விஷயங்களையும் அதிகம் பகிர்ந்து அவர்களையும் தங்களின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளச் செய்தல்; குழந்தைகள் பேசும் பொழுது அதை முழுமையாக கேட்டல் இப்படி அவர்களுக்காக நாம் செலவிடும் நேரம் அவர்களின் எதிர்காலத்தை கட்டமைக்க மிகவும் உதவி புரியும்.

சொந்த நலனிலும் அக்கறை

குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தும் பல பெற்றோர்கள் தங்கள் உடல் மற்றும் மன நலனை பற்றிய சிந்தனையை தொலைத்து விடுகின்றனர். இது குழந்தை செய்யும் சிறு சிறு பிழைகளைக் கூட அவர்களை மிகப்பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடுகிறது. அது கோபமாக மாறி அந்த குழந்தை மீது தான் திரும்புகிறது. எனவே பெற்றோர்களுக்கும் ஆசுவாச நேரம் அவசியம். உங்களுக்கு என்றும் தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி அதில் உங்களுக்கு பிடித்த வேலைகள் செய்யத் தவறி விடாதீர்கள்.

குழந்தை வளர்ப்பை வேலையாக நினைத்தால் அது சற்றே கடினமான வேலைதான். ஆனால் அதை ஒரு கலையாக நினைத்து செய்ய தொடங்கினால் பெற்றோராகிய நாமும் மகிழலாம் ஒரு மகிழ்ச்சியான சூழலில் குழந்தையையும் வளர்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.