லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழில் சிம்பு நடித்த படத்தில்தான் அறிமுகமாகி இருக்க வேண்டியது. ஆனால் அந்த படத்தின் இயக்குனர் நயன்தாராவை அழைத்து நடிக்க சொல்லியபோது இவருக்கு நடிக்க தெரியவில்லை, இவர் வேண்டாம் என்று தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்த நயன்தாரா, தமிழில் சரத்குமார் நடித்த ‘அய்யா’ என்ற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். ஹரி இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் நயன்தாராவின் நடிப்பிற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது.
இந்த படத்தை அடுத்து அவர் ஒரு சில மாதங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘சந்திரமுகி’ படத்தில் நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட்டானது.

நயன்தாராவின் முதல் இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படமானதால், அவர் ராசியான நடிகை என்று தமிழ் சினிமாவில் முத்திரை குத்தப்பட்டு, அதன் பிறகு இன்று வரை அவர் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்.
ஆனால் ‘அய்யா’ படத்திற்கு முன்பே அவர் நடிக்க வேண்டிய தமிழ் படம் என்றால் அது சிம்பு நடித்த ‘தொட்டி ஜெயா’ என்ற படம்தான். இந்த படத்தின் பட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது சிம்பு ஹீரோவாக நடிப்பது என்று முதலில் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து ஹீரோயின் யார் என்று பரிசீலனை செய்து கொண்டிருந்தபோதுதான் நயன்தாரா வரவழைக்கப்பட்டார்.
அப்போது அவரை இயக்குனர் துரை ஆடிஷன் செய்த போது அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்று கூறினார். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு, அவருடைய நடிப்பு நன்றாக தான் இருக்கிறது, நீங்கள் வேறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு இந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்கிறீர்கள், நீங்கள் ஒரு நல்ல நடிகையை இழக்கிறீர்கள், நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நட்சத்திரமாக வருவார் என்று கூறினார்.

ஆனால் தாணுவின் பேச்சைக் கேட்காத, இயக்குனர் துரை, கோபிகா என்பவரை நாயகி ஆக்கினார். அதன் பிறகு இந்த படம் வளர்ந்தது. ஹிந்தியில் இருந்து வில்லன் பிரதீப் ராவாத் என்பவரை தமிழில் இந்த படத்தில் அறிமுகப்படுத்தினார்கள்.
ரஜினிக்கு இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தும் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? தேவாவின் இசை வாழ்க்கை..!
முன்னதாக இந்த படத்தின் நாயகனாக சிம்பு நடிப்பதையும் தாணு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டி.ராஜேந்தருடன் அவருக்கு பிரச்சனை இருந்ததால் இந்த படத்தில் சிம்பு நடித்தால் மீண்டும் பிரச்சனை ஏற்படும் என்று நினைத்தார். ஆனால் சிம்புவே நேரடியாக வந்து, ‘நான் நடிக்கிறேன், இந்த படத்தில் எந்த பிரச்சனையும் எங்கள் வீட்டில் இருந்து வராது’ என்று உறுதிமொழி கொடுத்ததை அடுத்து இந்த படத்தில் நடித்தார்.
தாணு எதிர்பார்த்தது போலவே சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரச்சனை செய்ததாகவும் டப்பிங் செய்ய வரமாட்டேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு சில பஞ்சாயத்து பேசி தான் இந்த படம் ஒரு வழியாக முடிந்தது.

‘தொட்டி ஜெயா’ திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக நாயகி நடிப்பு குறித்து ரசிகர்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஒருவேளை நயன்தாரா இந்த படத்தில் நடித்திருந்தால் இதற்கு முன்பே ‘அய்யா’ மற்றும் ‘சந்திரமுகி’ வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியிருந்ததால், இந்த படமும் ஓடியிருக்கும் என்றும் கோலிவுட் திரையுலகினர் அப்போதே கூறியிருந்தனர்.
சிம்புவுக்கு ஜோடியாக நடித்த 6 நடிகைகள் அவரை விட வயது அதிகமா? யார் யார் தெரியுமா?
தொட்டி ஜெயா படத்தில் நயன்தாராவுடன் நடிப்பதை சிம்பு மிஸ் செய்தாலும், அதன் பிறகு ‘வல்லவன்’, ‘இது நம்ம ஆளு’ உள்பட ஒரு சில படங்களில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
