‘முந்தானை முடிச்சு’ படம் குறித்த பேச்சு வார்த்தை நடந்தபோது ஏவிஎம் நிறுவனத்திடம் ஒரு வாக்குறுதியை பாக்யராஜின் முதல் மனைவி கேட்டதாகவும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றி தருவதாக ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் உறுதி அளித்து இருந்ததாகவும் ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்குள் அவர் மறைந்து விட்டதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் திரைப்படங்களில் ஒன்று ‘முந்தானை முடிச்சு’. இந்த படம் 1983ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ரிலீஸானது. 40 ஆண்டுகளாகியும் இன்னும் இந்த படம் பேசப்படுகிறது என்றால் அதற்கு பாக்யராஜின் திரைக்கதை, வசனம்தான் காரணம்.
கே.பாக்யராஜ் உடன் காதல்.. திருமணத்திற்கு பின் 28 வருடங்கள் நடிக்காமல் இருந்த பூர்ணிமா ஜெயராம்..!
கமல், ரஜினியை வைத்து பல திரைப்படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் பாக்யராஜை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தது. இதனை அடுத்து பாக்யராஜின் நண்பர் மூலம் அவரை தொடர்பு கொண்டு கதை சொல்ல சொன்னதாகவும் பாக்யராஜும் ஒரு கதையை தயார் செய்து ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு சொல்ல முடிவு செய்தார்.
ஏவிஎம் அலுவலகத்திற்கு வந்து விடுங்கள் என்று பாக்யராஜுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இல்லை பாங்குரோவ் ஹோட்டலில் ரூம் புக் செய்து இருக்கிறேன், அங்கு வாருங்கள் என்று ஏவிஎம் சரவணணை வர செய்தார். அலுவலகத்தில் கதை சொன்னால் அவ்வப்போது யாராவது வருவார்கள், கதை சொல்லும் போது குறுக்கீடு இருக்கும் என்பதால் தான் பாக்யராஜ் ஹோட்டலுக்கு வரச் சொன்னதாக கூறப்பட்டது.
எந்தவித குறிப்பு பேப்பர்களும் கையில் இல்லாமல் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரைக்கும் இடைவெளியின்றி பாக்யராஜ் கதை சொன்னதாகவும் அதை பார்த்து ஏவிஎம் சரவணன் அசந்து விட்டதாகவும் அவரே பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போதுதான் பாக்யராஜின் முதல் மனைவி பிரவீனா, ஏவிஎம் சரவணன் அவர்களிடம் ஒரு வாக்குறுதி கேட்டார். இந்த படத்தை மட்டும் அல்ல நீங்கள் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறீர்கள். ஒருவேளை ‘முந்தானை முடிச்சு’ ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை ரிலீஸ் செய்தால் இந்த படத்தை தியேட்டரில் இருந்து தூக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே ‘முந்தானை முடிச்சு’ ரிலீஸாகி 100 நாட்கள் வரை இந்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்தாராம்.
அதற்கு ஏவிஎம் சரவணன் ஒப்புக்கொண்டார். ஒருவேளை ‘தூங்காதே தம்பி தூங்காதே’ முன்னாதாக ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் சென்னை அலங்காரில் மட்டும் ‘முந்தானை முடிச்சு’ படத்தை தூக்க மாட்டோம் என்று பிரவீனாவுக்கு அவர் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதிப்படியே, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ ரிலீஸான போது சென்னை அலங்காரில் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. முந்தானை முடிச்சு படம் தான் அந்த தியேட்டரில் ஓடியது. ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதை பார்க்க அப்போது பிரவீனாதான் உயிருடன் இல்லை என்பதும் பெரும் சோகம்.
இந்த படம் தமிழகத்தில் உள்ள 69 நகரங்களில் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் 43 இடங்களில் 100 நாட்களும் 12 இடங்களில் வெள்ளிவிழாவும் 14 இடங்களில் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!
மனைவி இறந்த பிறகு இரண்டாம் திருமணம் செய்யாமல் பிடிவாதமாக குழந்தையுடன் வசித்து வரும் பாக்யராஜை ஒருதலையாக ஊர்வசி காதலிப்பார். ஆனால் பாக்யராஜ் அவருக்கு இடம் கொடுக்காமல் இருந்த நிலையில் பாக்யராஜ் தன்னை கெடுத்து விட்டதாக கூறி அவருடைய முதல் மனைவியின் குழந்தையை தாண்டி சத்தியம் செய்வார். அதனால் அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ் வேறு வழியில்லாமல் ஊர்வசியை திருமணம் செய்து கொள்வார்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் குழந்தையை தாண்டி தான் சொன்னது பொய் என்று ஊர்வசி கிராமத்தினர் முன்னிலையில் கூறுவார். இந்த நிலையில் ஊர்வசி மீது கடும் கோபத்தில் பாக்யராஜ் இருந்த நிலையில் இருவரும் மீண்டும் இணைவது எப்படி என்பது தான் இந்த படத்தின் மீதிக் கதை.
நகைச்சுவை காட்சிகள், பெண்களை கவரும் சென்டிமென்ட், கதை கூறும் பாணி, திரைக்கதை கச்சிதமாக அமைக்கப்பட்டது. குறிப்பாக தீபா கேரக்டர் இளசுகளை இழுக்கும் வகையில் இருந்தது.
ஒரே ஒரு ஒன்லைன் கதை.. அபார திரைக்கதையால் சூப்பர் ஹிட்டான பாக்யராஜ் படம்!
அதேபோல் இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் கங்கை அமரனை பாக்யராஜ் முடிவு செய்திருந்த நிலையில், ஏவிஎம் நிறுவனம் இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதை அடுத்து இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.