குழந்தையின் முதல் மொழி அழுகைதான். அழுகையின் மூலம் தான் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். பசி, தூக்கம் போன்ற அவர்களது தேவைகளை நிறைவேற்றிட குழந்தை அழத் தொடங்கும். பின் படிப்படியாகத்தான் பேச தொடங்குவார்கள். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதம் ஏற்படலாம். பேச்சு தாமதம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
குழந்தையின் கேட்கும் திறன் குறைபாடு, மூளையில் போதுமான கொழுப்பு சத்து இல்லாமை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் குழந்தை பேச தாமதமானால் அதற்கு முக்கிய காரணம் குடும்பத்தினர் குழந்தையுடன் அதிக நேரம் பேசாமல் இருப்பது தான்.
எனவே குழந்தை பிறந்த நாளிலிருந்து அதனுடன் பேச தொடங்குங்கள். பிறந்த குழந்தைக்கு என்ன புரியும்? என்று நினைக்க வேண்டாம். குழந்தைகள் சில நாட்களிலேயே அனைத்தையும் கவனிக்க தொடங்கி விடுவார்கள். எந்தெந்த வயதில் குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பார்க்கலாம்.
0 முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகள்:
இந்த வயதில் குழந்தைகளுக்கு முகங்களை காண்பது மிகவும் பிடிக்கும். எனவே கையில் உங்கள் குழந்தையை பிடித்தபடி அவர்களின் முகத்தைப் பார்த்து பேசுங்கள்.
நீங்கள் செய்யும் வேலைகளை குழந்தையுடன் பேசிய படியே செய்யுங்கள். உதாரணமாக குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது, அவர்களை துடைக்கும் பொழுது என்ன செய்கிறீர்களோ அதை அவர்களிடம் பேசிக் கொண்டே செய்யலாம். “பாப்பாக்கு சட்டை மாற்றலாமா?”, “பாப்பாவிற்கு பசிக்கிறதா?” என்று பேசுங்கள்.
அவர்கள் பதிலுக்கு ஏதேனும் குரல் எழுப்புவார்கள் அந்தக் ஒலியை மீண்டும் நீங்கள் எழுப்புங்கள். இதன் மூலம் குழந்தைகளிடம் வார்த்தைகளை கவனித்தல் அதை மீண்டும் உச்சரித்தல் போன்றவை வளர்ச்சி அடையும்.
குழந்தைகளிடம் கூடுமானவரை பாடல்கள் பாடுங்கள். குழந்தைகள் பாடல்களை நன்கு கவனிப்பார்கள்.
6 முதல் 12 மாதங்கள் வரை உள்ள குழந்தைகள்:
இந்த வயதில் குழந்தைகளிடம் நீங்கள் இருவரும் பார்க்கும் பொருட்களை பற்றி பேசலாம். “இதோ மாடு போகிறது பார்”, “அப்பா எங்கே?”, “மின்விசிறி சுற்றுகிறது பார்” இப்படி உங்களை சுற்றி உள்ள பொருட்களை பற்றி பேசுங்கள்.
படங்கள் அடங்கிய புத்தகங்களை காட்டி அதில் உள்ள படங்களின் பெயர்களை தெளிவான உச்சரிப்புடன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.
குழந்தைகளுடன் ஒளிந்து பிடித்து விளையாடுதல், தோட்டங்களை சுற்றி விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். இதன் மூலம் குழந்தைக்கு திரும்புதல், சுற்றுதல், கேட்டல், கவனித்தல் போன்ற பல திறன்களை வளர்க்க முடியும்.
12 முதல் 18 மாதங்கள் உடைய குழந்தைகள்:
இந்தப் பருவத்தில் குழந்தைகள் ஒரு சில வார்த்தைகளை பேச தொடங்கி இருப்பார்கள். சில வார்த்தைகளை அவர்கள் தவறாக உச்சரிக்கலாம் அப்பொழுது அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசுங்கள் திட்டவோ அதட்டவோ கூடாது.
குழந்தைகளிடம் அவர்களுக்கு எது விருப்பமோ அதை கூறச் செய்யுங்கள். இதன் மூலம் அவர்கள் சொற்களை அறிந்து கொள்ள முடியும். இப்பொழுது என்ன சாப்பிடுகிறாய் இட்டிலியா? தோசையா? உனக்கு எது பிடிக்கும் ஆப்பிளா? ஆரஞ்சா? இப்படி அவர்களது விருப்பத்தை கேட்கும் பொழுது அதற்கு பதில் கூறத் தொடங்குவார்கள் சொற்களையும் கற்றுக் கொள்ள முடியும்.
ஒலி எழுப்பும் பொம்மைகளை விளையாட அனுமதிகள்.
கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடி வா போன்ற மழலையர் பாடல்களை அபிநயத்துடன் சொல்லிக் கொடுங்கள். உங்களைப் பார்த்து குழந்தைகளும் அதை கூற முயற்சி செய்வார்கள்.
18 முதல் 24 மாதங்கள் வரை உள்ள குழந்தைகள்:
இந்த வயதில் குழந்தைகளுக்கு ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப பயன்படுத்துங்கள். அவர்களுக்கு நினைவில் பதியும் வரை சொல்லிக் கொண்டே இருங்கள். “உன்னுடைய செருப்பு எங்கே?, இன்னைக்கு எந்த நிறத்தில் செருப்பு அணிந்துள்ளாய்?, உன் செருப்புகளை அடுக்கி வை” என்று செருப்பு எனும் ஒரு வார்த்தையை அவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது திரும்பத் திரும்ப வரும்படியான வாக்கியங்களை பயன்படுத்துங்கள்.
சின்ன சின்ன வாக்கியங்களை பயன்படுத்துங்கள். அவர்களின் உடல் உறுப்புக்களை சுட்டிக்காட்டும்படி கூறுங்கள். உன் கண் எங்கே? மூக்கு எங்கே? என்று கேட்டு அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள் என்று பாருங்கள்.
2 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள்:
இந்த வயதில் குழந்தைகளை பெரிய வாக்கியங்களை பேச பழக்குங்கள்.
அவர்களின் பெயரை கூறி அழைத்து ஏதேனும் கேள்வி கேளுங்கள். அவர்கள் பதில் கூறவில்லை என்றால் மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டு அவர்கள் பதில் கூறுவதற்கு நிறைய நேரம் கொடுங்கள்.
வீட்டை சுத்தம் செய்தல், கடைக்கு செல்லுதல் போன்ற உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் குழந்தைகளையும் இணைத்து செயல்படுங்கள்.
சில குழந்தைகள் தாமதமாக பேசத் தொடங்கலாம். அதனால் பிற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். அவர்களுக்கு உரிய நேரத்தை, பயிற்சியை கொடுங்கள் எதையும் குழந்தைக்கு வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது.