முதன் முதலாக தஞ்சையை தஞ்சன் என்ற ஒரு அரக்கன் தான் ஆண்டு வந்தான். அப்போது அந்த ஊருக்குப் பெயர் தஞ்சன் ஊர் என்று தான் இருந்தது. நாளடைவில் அது மருவி தஞ்சன் புரி என்றும் தஞ்சாவூர் என்றும் ஆனது. இப்போது தஞ்சை என்று சுருங்கியுள்ளது.
சிறப்புகள்
சோழ அரசர்கள் தமிழகத்தில் கட்டிய கோவில்களில் சிறப்பு வாய்ந்தது தஞ்சை பெரிய கோவில். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. இதன் மற்றொரு பெயர் ராசராசேச்சுரம். சுவாமி எழுந்தருளிய விமானத்திற்கு தட்சிண மேரு அல்லது உத்தம விமானம் என்று பெயர். இதன் உயரம் 216 அடி.
இங்குள்ள சிவலிங்கம் மிகப்பெரியது. இதன் பெயர் பெருவுடையார். இது நர்மதை நதி தீர்த்தத்தில் இருந்து ராஜராஜ சோழனால் கொண்டு வரப்பட்டது.
காஞ்சியில் ராஜசிம்மன் கட்டிய கைலாய நாதர் கோவில் ராசராசனைக் கவர்ந்தது. அதே போல் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்ட வேண்டும் என்று நினைத்தான். அதுபோலவே கட்டியும் முடித்தான்.
பெருவுடையாரின் எதிர்புறம் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் ஆனது. இதன் உயரம் 12 அடி. நீளம் 19 1/2 அடி. அகலம் 8 1/2 அடி.
இங்குள்ள சிவபெருமானுக்கு ராசராசேச்சுரமுடையார், மேருவிடங்கர், ஆடவல்லான் என்று பல பெயர்கள் உண்டு. வடமொழியில் சுவாமிக்கு பிரகதீஸ்வரர் என்றும் அம்மைக்கு பிரகந்நாயகி என்றும் பெரியநாயகி என்றும் பெயர்.
தஞ்சை நகரின் தென்மேற்குப் பகுதியில் கோவில் அமைந்துள்ளது. 3 வாயில்கள் உள்ளன. அவை, ராசராசன் திருவாயில், கேரளாந்தகன் திருவாயில், திருவணுக்கன் திருவாயில்.
இந்த வாயில்களின் மேல் உள்ள கோபுரங்கள் அகலமானவை. ஆனால் உயரம் குறைவு. கோவிலின் விமானங்கள் கோபுரத்தை விட மிக உயரம்.
முதல் மற்றும் 2ம் வாயில்களைக் கடந்து சென்றால் நந்தி மண்டபம் உள்ளது. இது உயரமான மேடை போல் அமைந்துள்ளது.
கருவறை மிகப் பெரியதாக சதுர வடிவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல நேர்முகப் படிக்கட்டும், இருபுறமும் கர்ண துவாரகப் படிக்கட்டுகளும் உள்ளன. கருவறையின் உள்ளே இருக்கும் லிங்கத்தின் உயரம் 12 அடி.
கருவறையின் உள்ளே ஒரு சுற்றாலை உள்ளது. இதன் சுவர்களில் ராஜராஜன் காலத்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கருவறையின் வெளிச்சுவற்றில் பல தேவகோட்டங்கள் உள்ளன.
கருவறையின் மேல் அமைந்துள்ள தட்சிணமேரு விமானம் 13 தளங்களைக் கொண்டது. அதன் மேல் கிரீவம் மற்றும் சிகரம் ஸ்தூபிகளைக் கொண்டது. 13 தளத்திற்கும் மேலே உள்ள பிரமரந்திர தளம் ஒரே கல்லால் ஆனது. இதன் எடை 80 டன்.
இதன் மூலைகளில் மிகப்பெரிய கல் நந்திகள் உள்ளன. சிகரத்தின் மேல் பொன் தகடு வாய்ந்த செப்பு ஸ்தூபி வைக்கப்பட்டுள்ளது.
கருவறைக்கு வெளியே உள்ள சுற்றாலையின் பரந்த வெளியில் விநாயகர், கருவூர்த்தேவர், சண்டேசுவர் ஆகியோருக்குத் தனிக் கோவில்கள் உள்ளன. இவை ராசராசன் காலத்தவை. அம்பிகை கோவில் பின் வந்த சோழர்களால் கட்டப்பட்டவை.
1000 ஆண்டுகள்
1010ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோவிலுக்கு கடந்த 2010ம் ஆண்டில் ஆயிரமாவது ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வருகிறது. 1987ல் யுனெஸ்கோ இந்தக் கோவிலை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
ஏறத்தாழ 1000 ஆண்டுகள் ஆகியும் இக்கோவில் சிதையாமல் நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விழாக்கள்
பெரிய கோவிலில் பிரம்மோற்சவம், ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா, அன்னாபிஷேகம், திருவாதிரை, ஆடிப்பூரம், கார்த்திகை, பிரதோஷம், சிவராத்திரி, தேரோட்டம் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாக்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.