என்னது? பூண்டில் பாயாசம் செய்யலாமா? குக் வித் கோமாளியில் செய்த முகாலயர் காலத்து பூண்டு பாயாசம்…!

Published:

பூண்டு பாயாசம் பெயரை கேட்டதுமே என்ன? பூண்டில் எப்படி பாயசம் செய்வது? என்று வினோதமாக தோன்றலாம். ஆனால் இது முகாலயர் காலத்தில் செய்யப்பட்ட ஒரு பாரம்பரியமான இனிப்பு வகையாகும். தொலைந்து போன பல பாரம்பரிய ரெசிபிகளில் இதுவும் ஒன்று.

பூண்டு பாயாசம் பினாமி கீர் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் அப்பொழுது இதில் உள்ள ரகசிய மூலப்பொருள் (பூண்டு) என்ன என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை.

பூண்டு உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது ஆனால் அந்தப் பூண்டின் நறுமணமும் சுவையும் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படி பூண்டு பிடிக்காதவர்கள் ஆனால் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த ரெசிபியை தாராளமாக முயற்சித்து பார்க்கலாம். காரணம் இந்த பூண்டு பாயாசம் பூண்டு சேர்த்தது போன்ற சுவை தெரியாது. மாறாக பாதாம் சேர்க்கப்பட்ட கெட்டியான பாயாசம் போன்று தான் சுவை இருக்கும். இதை செய்வதற்கு அதிகமான பொருட்கள் தேவை இல்லை எளிதில் தயாரித்து விடலாம்.

பூண்டு பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:

images 4 5

  • பூண்டு: 20 பல்
  • பால்: 500 மில்லி லிட்டர்
  • குங்குமப்பூ – 2 சிட்டிகை
  • சர்க்கரை – 6 ஸ்பூன்
  • ஏலக்காய் பொடி: 1/4 ஸ்பூன்
  • வினிகர்
பூண்டு பாயாசம் செய்யும் முறை:

பூண்டினை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய பூண்டினை வினிகரில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து இந்த பூண்டினை சேர்த்து சிறிது நேரம் கழித்து வடிகட்டவும். தண்ணீர் அதிகம் கொதிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஓரளவு கொதித்தால் போதும். இதே போல் மூன்று முறை செய்து பூண்டினை வடிகட்டி வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

ஆடை படியாமல் ஓரங்களில் பாலினை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

பால் வற்றத் தொடங்கியதும் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து வற்ற விடவும்.

அரை லிட்டர் பால் கால் லிட்டர் ஆகும் வரை நன்கு வற்ற வேண்டும்.

இப்பொழுது பொடியாக நறுக்கி தயார் செய்த பூண்டினை பாலில் சேர்த்து கிளறவும்.

விருப்பப்பட்டால் சிறிதளவு பூண்டை நெய் அல்லது வெண்ணையில் வறுத்து மேலே தூவி கொள்ளலாம். உங்களுக்கு தேவைப்படும் நட்ஸையும் தூவி கொள்ளலாம்.

அவ்வளவுதான் பூண்டு பாயாசம் தயார்!!!

மேலும் உங்களுக்காக...