எலான் மஸ்க்கை தொழில் தொடங்க அழைப்பு விடுத்த கர்நாடக அரசு.. தமிழக அரசும் அழைக்குமா?

By Bala Siva

Published:

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க்கை தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை கர்நாடகாவின் ஐடி, பிடி, மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர். சி.என். அஸ்வத் நாராயண், மஸ்க்கிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்,.

அந்தக் கடிதத்தில், கர்நாடகா தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலமாக இருப்பதாகவும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற வணிகங்களை ஆதரிக்கும் சூழல் உள்ள மாநிலமாக இருப்பதாகவும் நாராயண் கூறினார். மேலும் எலான் மஸ்க் இங்கு தொழில் தொடங்க வருகை தந்தால் வணிக சார்பு கொள்கைகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்கு கர்நாடகா ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்றும், நிறுவனங்கள் வெற்றிபெற தேவையான அனைத்து ஆதரவையும் மாநிலம் வழங்கும் என்றும் நாராயண் கூறியுள்ளார். மேலும் அவர் கர்நாடகாவிற்கு வருகை தரவும், மாநிலத்தில் வணிகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை விவாதிக்க மாநில அரசாங்கத்தை சந்திக்கவும் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பிற்கு எலான் மஸ்க் இன்னும் பதிலளிக்கவில்லை என்றாலும் அவர் இந்தியாவில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அலசி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எலான் மஸ்க் கர்நாடகாவில் தொழில் தொடங்க முடிவு செய்தால், அது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் டெஸ்லா கர்நாடகாவில் தொழில் தொடங்கினால் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவை அடுத்து தமிழகம் உள்பட பல மாநிலங்கள் டெஸ்லா நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.