படப்பிடிப்பு துவங்கும் முன்பே தளபதி68 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார். 300 கோடி ரூபாய் வரை வசூலித்தது என்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்தனர்.
தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67-வது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் 22 ஆம் தேதி நான் ரெடி என்ற சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது.
லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதையடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். அவரது தம்பி யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இந்த புதிய படத்தினை தயாரிக்க உள்ளது.
இந்த படத்திற்காக விஜய்க்கு சம்பளம் மட்டும் 200 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் மீது ஒரு பொது நல வழக்கு பதிவு செய்யப்பட்டு பட ரிலீஸ் சமயத்தில் டிக்கெட் விற்பனையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூலிக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமான ஒப்புதலை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் மற்றும் நடிகர் சம்பளம் ஆகியவற்றால் அப்பாவி ரசிகர்கள் கூடுதல் தொகை கொடுத்து டிக்கெட் வாங்கும் சூழலை களையும் பொருட்டு இந்த வழக்கு பதியப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.