திருச்செந்தூரில் மட்டும் வைகாசி விசாகம் விமரிசையாகக் கொண்டாடப்பட என்ன காரணம்னு தெரியுமா?

By Sankar Velu

Published:

முருகனின் பிறந்தநாளான வைகாசி விசாகம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தண்ணீரை அசுத்தம் செய்து மீன்களாக சாபம் பெற்ற முனிவருக்கு சாபவிமோசனம் கிடைத்தது ஒரு சுவையான வரலாறு. அதைப் பற்றிப் பார்ப்போம்.

Vaikasi visagam
Vaikasi visagam

இந்த இனிய நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயாசம், அப்பம், நீர் மோர் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைப்பர். இந்த நாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த்தொட்டியில் 6 மீன் பொம்மைகளை வைக்கின்றனர்.

முருகனுக்குப் பாலாபிஷேகம் செய்யும்போது அவரது வாயிலிருந்து சிந்திய பாலைக்குடித்த மீன்கள் சாபவிமோசனம் பெறுகின்றன. உடனே பராசுர முனிவர்களின் குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக 6 முனிவர்களின் உருவபொம்மைகளை வைத்து முருகன் சாபவிமோசனம் செய்யும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

பராசுர முனிவருக்கு 6 குழந்தைகள். அனைவருமே படு சுட்டி. ஒரு நாள் அவர்கள் குளத்தில் குளிக்கும்போது அங்குள்ள தண்ணீரை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டு இருந்தனர். இதனால் அங்குள்ள மீன்களும், தவளைகளும் வேதனைப்பட்டன.

இதனைக் கண்ட பராசுர முனிவர் நீங்கள் நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது. சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீரில் நீராடி விளையாடியது போதும். உடனே வெளியே வாருங்கள் என கட்டளையிட்டார். அப்பா சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டுக் கொண்டே இருந்தனர்.

Parasurar
Parasurar

அதனால் பல மீன்கள் இறந்து போயின. அதனைப் பார்த்த பராசுர முனிவர் குழந்தைகளை மீன்களாக மாறக் கடவது என சாபமிட்டார்.

6 குழந்தைகளும் 6 மீன்களாக மாறினர். இதற்கு சாப விமோசனம் கிடைக்காதா என்று கேட்டனர். அதற்கு பார்வதியின் அருளால் விமோசனம் கிடைக்கும் என்றார்.

மீன்களாக மாறி நெடுங்காலமாக அந்த நீரில் நீந்தி வந்தனர். ஒரு சமயம் சிவலோகத்தில் ஞானப்பாலை ஒரு தங்க கிண்ணத்தில் வைத்து முருகப்பெருமானுக்கு ஊட்டினார்.

அப்போது அதிலிருந்து ஒரு சொட்டு பால் பராசுர முனிவரது மீன்களாக மாறிய குழந்தைகள் உள்ள குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் பருகியதால் 6 பேரும் முனிவர்களாக மாறினர். அவர்கள் அங்குள்ள சிவபெருமானை வழிபட்ட போது நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று வழிபடுங்கள்.

6 Munivar
6 Munivar

அங்கு முருகப்பெருமான் அருள்புரிவார் என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அவர்கள் திருச்செந்தூர் சென்று வழிபட்டனர். வைகாசி விசாகம் நிறைந்த பௌர்ணமி நாளில் முருகப்பெருமான் அருள் கிடைத்தது. சிவனின் அருளால் 6 முனிவர்களின் சாபம் நீங்க முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம்.

அன்றைய தினம் முன்வினைப் பயனால் அவதிப்படுபவர்கள் முருகனை வழிபட துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என புராணங்கள் கூறுகின்றன.

பராசுர முனிவரது குழந்தைகளுக்கு முருகப்பெருமான் அருளியதால் இந்நிகழ்வு வைகாசி விசாகத்தையொட்டி 10 நாள்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். வைகாசி விசாகத்தன்று கோவிலின் கருவறையில் இறைவனுக்கு உஷ்ணசாந்தி உற்சவம் என்ற வெப்பம் தணிக்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.