ஆன்மிகம் என்றால் ஏதோ புராணக்கதைகள் தான். நிஜத்தில் எங்கெங்கே நடக்குதுன்னு சிலர் அங்கலாய்ப்பதுண்டு. கடும் சோதனைகள் தான் இவர்களை அவ்வாறு பேச வைக்கும். நானும் தான் சாமியைக் கும்பிடாத நாள் கிடையாது. ஆனா எனக்குத் தான் எதுவுமே நடக்க மாட்டேங்குதுன்னு இவங்க சொல்வதைப் பார்த்திருப்போம்.
இது ஏன் நடக்குதுன்னு அவங்களுக்குத் தெரிஞ்சா அவங்க பெரிய ஆன்மிகவாதியா ஆகிடுவாங்க. அதன்பிறகு தான் கடவுளையே உணரத் தொடங்குவாங்க. அந்த வகையில் ஒரு பக்தனை சோதிக்கும் விதமாக கடவுள் குருவாயூரப்பன் செய்த லீலை ஒன்றை இங்கே பார்ப்போம்.
முன்னொரு சமயத்தில் கிராமவாசி ஒருவர் தனது தோட்டத்தில் பல தென்னங்கன்றுகளை நட்டார். தனது தோட்டத்தில் விளைந்த தென்னை மரங்களில் இருந்து காய்க்கும் முதல் அறுவடையில் வரும் தேங்காய்களை குருவாயூரப்பனுக்குக் காணிக்கையாக அளிப்பதாக நேர்ந்து கொண்டார்.
மரங்கள் காய்க்கத் தொடங்கிய போது, அவரது மரங்களில் இருந்து முதல் தேங்காய்களைச் கோணிப் பையில் சேகரித்து கொண்டு குருவாயூர் கோவிலுக்குப் பயணித்தார்.
போகும் வழியில் ஒரு கொள்ளைக்காரன் ஒருவன் வழிமறித்தான். “கோணிப் பையில் உள்ளதைத் தந்து விட்டு மரியாதையாகச் சென்றுவிடு என்று அவரை மிரட்டினான்.
அந்த கிராமவாசியோ, “இந்த கோணிப் பையில் தேங்காய்கள் மட்டுமே உள்ளன. அவை குருவாயூரப்பனுக்கு எனது காணிக்கையாக எடுத்து செல்கிறேன். இது நைவேத்திய தேங்காய். இதை தர முடியாது’ என்று கூறினார்.
கொள்ளைக்காரன் அலட்சியமாக, “குருவாயூரப்பனின் தேங்காய் என்று எங்காவது எழுதி இருக்கிறதா? இல்லை… அதற்குக் என்ன பிரத்யேகமாக ரெண்டு கொம்புகள் இருக்குதா…. என்ன? என கிண்டல் செய்தான். அதுமட்டுமல்லாமல் கிராமவாசியின் கைகளில் இருந்து கோணிப்பையைப் பிடித்து இழுத்தான். கோணி பைக்குள் இருந்த தேங்காய்கள் வெளியே சிதறின.
அதிசயப்படும்படியாக ஒவ்வொரு தேங்காய்க்கும் 2 கொம்பு முளைத்திருந்தது. கிராமவாசியின் பக்தியையும் குருவாயூரப்பனின் அற்புதத்தையும் கண்ட திருடன் பிரமித்துப் போனான். உடனே செய்த தவறுக்காக மனம் வருந்தி, குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்டான். அந்த கிராமவாசியைப் போக வழிவிட்டான்.
கிராமவாசியும் தான் வேண்டிக்கொண்டபடியே தேங்காய்களைக் கோயிலில் காணிக்கையாகக் கொடுத்தான். இன்று கூட பக்தர்கள் அந்த கிராமவாசி காணிக்கையாகக் கொண்டு வந்த கொம்புகள் உள்ள தேங்காய்களை, குருவாயூர்க் கோயிலின் முன் மண்டபத்தில் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.