எல்லோருக்குமே வாழ்வில் எங்காவது ஒரு இடத்தில் தர்மசங்கடமான சூழல் ஏற்படும். திடீரென மருத்துவச் செலவு வரும். கையில் ஒரு பைசா இருக்காது. மகளுக்கு கல்லூரியில் பணம் கட்ட வேண்டியது இருக்கும். எங்குமே கடன் கிடைக்காது. நடுவழியில் டூவீலரோ, காரோ பஞ்சராகிப் போகும்.
கையில் பைசாவே இருக்காது. வெயில் வேறு வாட்டி வதைக்கும். இதுபோன்ற சூழலில் மாட்டிக் கொண்டு பலரும் அவதிப்படுவர். இதுபோன்ற தர்மசங்கடமான சூழலில் இருந்து தப்பிக்கும் உபாயம் அபிராமி அந்தாதியில் 84வது பாடலில் சொல்லப்பட்டுள்ளது. என்னன்னு பார்க்கலாமா…
உடையாளை, ஒல்கு செம்பட்டுடையாளை, ஒளிர்மதிச் செஞ் சடையாளை, வஞ்சகர் நெஞ்சு அடையாளை, தயங்கு நுண்ணூல் இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை, இங்கு என்னை – இனிப் படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.
அம்பிகையை எத்தனையோ விஷயங்களில் சொல்லி வாழ்த்தி இருந்தாலும் இந்த உலகத்திற்கு உடையவள் அவள் தான். யார் இதற்கு உரிமையானவர்களோ அவர்களுக்கு உடையவர்கள் என்று பெயர். இவன் என்னுடையவன் என்று ஒரு தலைவனைப் பார்த்து தலைவி சொல்கிறாள். இவள் என்னுடையவள் என்று தலைவியைப் பார்த்து தலைவன் சொல்கிறான். அப்படின்னா உடையவர்கள் என்றால் உரிமை ஆனவர்கள் என்று பொருள்.
அவள் உடையவள். எதற்கு உடையவள்? அகில புவனங்களில் நிறைந்து இருக்கிற அனைத்துப் பொருள்களுக்கும் உடையவள். உன்னுடையது என்று சும்மா சொல்லல. ஆத்மார்த்தமாகத் தான் அம்பாளிடம் சொல்கிறேன்.
அதனால் தான் இங்கு அபிராமி பட்டர் சொல்கிறார். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட பெரும் தேவி… எல்லாவற்றுக்கும் காரணமானவளும் நீதான். தொடர்ந்து அம்பாளின் அழகை விவரிக்கிறார். நல்ல அழகிய செந்நிறப் பட்டை ஆடையாக அணிந்தவள்.
சிவப்பு என்பது ஒரு அற்புதமான நிறம். அந்த சிவந்த நிறத்தில் அம்பாள் அந்தப் புடவையை உடுத்தியிருந்தாலே அது தனித்துவமான அழகாக இருக்கும். அதனால் தான் அம்பிகையை செக்கச் சிவந்த வானத்தைப் போல உடையவள் என்றும் சொல்கிறார்.
அவளது செக்கச் சிவந்து இருக்கக்கூடிய செந்தூரத்தின் நிறத்தையும், எழுந்து வரக்கூடிய கதிரவனின் நிறத்தையும் ஒன்றாக வைத்துத் தான் முதலிலேயே பாடினார்.
உதிக்கின்ற செங்கதிரோன் உச்சித்திலகம் என்று பாடியுள்ளார். ஒளிரும் சந்திரனைத் தலையில் எப்படி சிவபெருமான் சூடியுள்ளாரோ அதே போல அம்பாளும் பிறை சூடியவள் தான். ராஜராஜேஸ்வரி அம்மனைப் பார்க்கும் போது இது நமக்குத் தெரியவரும். பல கோலங்களில் அம்பாள் இந்தப் பிறையை அற்புதமாக அணிந்து இருக்கிறாள்.
அப்படி சுவாமிக்குள்ள சக்தியாக உருவெடுத்து இருக்கிறாள் அம்பாள் என்பதையே இது காட்டுகிறது. அப்பேர்ப்பட்ட அம்பிகை வஞ்சகர் நெஞ்சத்தை அடையவே மாட்டார். தீய எண்ணம் மனதிற்குள் இருந்தால் அங்கு அம்பாள் எழ மாட்டார். அதனால் தான் தீயவர்களுக்குத் தெய்வ வழிபாடு ஒரு கசப்பைத் தரும்.
அம்பிகைக்கு இடையானது சின்னஞ்சிறியதாக இருக்கும். பெண்ணுக்கே உரிய அழகான இடையாக மெல்லிய நூல் போன்று காணப்படுகிறது. சிவபெருமானின் இடப்பாகத்தை வலிய வேண்டி தவம் செய்து பெற்று இருக்கிறாள் அம்பிகை என்று இந்தப் பாடல் விவரிக்கிறது.
இவ்வளவு பேரழகு படைத்த அம்பாள் நமக்கு என்ன செய்யப் போகிறார் என்றும் சொல்கிறார் பட்டர். இனி என்னைப் படைக்க மாட்டார். யாரெல்லாம் இந்த அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்கிறார்களோ அவர்களையும் படைக்க மாட்டார்.
அதனால் பல இடங்களில் உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் தர்மசங்கடமான சூழ்நிலைகளை எல்லாம் போக்கி விடம். நல்ல மகிழ்வான மனநிலையை உங்களுக்குப் பெற்றுத் தருகிறது இந்தப் பாடல்.