பழம்பெருமை வாய்ந்த கூடல் நகருக்கு தற்போதைய பெயர் மதுரை. இங்கு சித்திரை திருவிழா என்றதும் நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்வதும் தான்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவர். கடந்த 2ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது. தொடர்ந்து இன்று (4.5.2023) கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது.
நாளை வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. இன்று இரவு தல்லாகுளமே கோலாகலம் பூணும். எங்கு பார்த்தாலும் வாராரு வாராரு அழகர் வாராரேய்… என்ற பாடல் தான் ஒலிக்கும். தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி பக்தர்கள் புடை சூழ மேளதாளத்துடனும், ஆட்டத்துடனும், கள்ளழகர் வேடமணிந்தும் வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.
எப்போதும் தூங்கா நகரான மதுரையில் இன்று திருவிழா ஆதலால் களைகட்டும் கொண்டாட்டம். சிறு குழந்தைகளுடன் தாய்மார்கள் உற்சாகமாக வந்து அழ கரைக் காண ஆவலுடன் வருவர். இதுகுறித்து பேராசிரியர் ஞானசம்பந்தன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…
சித்திரைத் திருவிழா சைவ வைணவ ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. வைகை ஆற்றுக்குத் தென்கரையில் சைவத் திருவிழா. ஆற்றுக்கு வடகரையில் வைணவ திருவிழா.
கள்ளழகர் தங்கக்குதிரையில் வந்து ஆற்றில் இறங்குகிற காட்சி. இதைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதும். கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் திரண்டு வருவர்.
அழகர் கோவில் 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று. ஆழ்வார்கள் பாடிய இடம். ஆண்டாளோட கடைசி காலத்தை அங்கு தான் கழித்தார். சிலப்பதிகாரத்தில் அழகர் மலை சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சிலம்பி ஆறு, நூபுர கங்கை பற்றியும் சொல்லப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்படுகிறார். பொய்கைக்கரைப்பட்டி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல், சுந்தராஜன் பட்டி, மூன்று மாவடி என அவரது பயணம் தொடர்கிறது.
கள்ளர் வேடம் தரித்திருக்கும் சுந்தரராஜபெருமாள் தனது கைகளில் வளரி என்ற பழமையான ஆயுதத்தை வைத்திருப்பதை நாம் பார்க்கிறோம். இது சிவகங்கை மாவட்டத்தில் இருக்கின்ற நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு ஆயுதம்.
சின்ன மருது, பெரிய மருது போன்றவர்கள் வளரியைப் பயன்படுத்துவதில் வல்லவர்கள். அழகர் மலையில் இருந்து வைகை ஆற்றை நோக்கி வருகின்ற இந்தத் திருவிழா சித்திரை மாதத்தில் சுக்கில பட்சத்தில் வளர்பிறையில் தொடங்குகிறது. 9 நாள்கள் நடைபெறுகின்ற இந்த விழா ஏகாதசி அன்று தொடங்குகிறது.
இவற்றில் 5 நாள்கள் மிக முக்கியமான நாள்கள். அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வருகிற போது நடக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி, சித்ரா பௌர்ணமி அன்று ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து வண்டியூரில் மண்டூக மகரிஷியின் சாபத்தைப் போக்கும் நிகழ்ச்சியும், ராமராயர் மண்டபத்தில் நடக்கும் தசாவதாரம் நிகழ்ச்சி, திரும்பப் புறப்பட்டு அழகர் மலை செல்லும் பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறும்.