தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும் பொன்னான நாள்…இந்நாள்…நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…!

By Sankar Velu

Published:

இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை தை மாத வளர்பிறை அஷ்டமி. இன்று காலபைரவரிடம் உங்கள் தேவைகளை வேண்டிக் கொள்ளுங்கள். இன்று பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து தண்ணீர் கலந்த சாதம், உளுந்து வடை மாலை சாற்றுதல், வெண் பூசணிக்காய் வெட்டி கழிப்பு கழித்தல், எலுமிச்சை சாதம் ஆகியவi தான் பைரவருக்கு பிடித்தமானவை. இன்று பிற்பகல் 2.52 மணி வரை அஷ்டமி உள்ளது. வளர்பிறை அஷ்டமியின் சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

Kaala Bairava
Kaala Bairava

வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்று சந்தேகம் வருவதுண்டு. நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.

உதாரணமாக பைரவர் வழிபாட்டினை எடுத்துக் கொள்வோம். பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இருவகையான அஷ்டமி திதிகள் உள்ளன. இவ்விரண்டு திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை. அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே உண்டு.

முதலில் தேய்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். இந்த நாளில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தீர்க்க வேண்டிய துன்பங்களை தீர்க்குமாறு வேண்ட வேண்டும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமது துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து அழிந்து போகும். எக்காரணம் கொண்டும் நம்முடைய தேவைகளை வேண்டி விடக்கூடாது.

இப்போது வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்ட வேண்டும். வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.

நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம். தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் தொடங்கும். பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம்.

Kala bairavaar
Kala bairavaar

பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பைரவ மூர்த்தியாக கோலம் கொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்.

யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்திக் கொண்டதையும் கண்ட பார்வதி தேவி மிகவும் பயந்தாள்.

தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார்.