தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறதா அறநிலையத்துறை? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

By Bala Siva

Published:

தமிழக அரசின் அறநிலைத்துறை தனியார் இடம் ஒப்படைக்க போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த செய்திகளில் எள்ளளவும் உண்மை இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இன்று பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு அதன் பின் கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார் அப்போது அறநிலை துறை தனியார் வசம் செல்ல போவதாக செய்திகள் வெளியானது குறித்து கருத்து கூறிய அவர் அறநிலைத்துறையை தனியாருக்கு கொடுக்கச் சொல்லும் செய்தி முழுக்க முழுக்க தவறானது என்றும் அதில் எள்ளளவும் உண்மை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அறநிலைத்துறையை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என கூறும் கட்சி, ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள நிலைபாடு என்ன என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அறநிலைத்துறை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் கட்டுப்பாடோடு இயங்கும் என்றும் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 48,000 கோவில்களை யார் யாரிடம் ஒப்படைக்க முடியும் என்றும் விலைமதிப்பற்ற செல்வங்கள் நிலங்கள் கலை பொக்கிஷங்கள் ஆகியவற்றை அரசுதான் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல கோயில்கள் மன்னர்கள் காலத்தில் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டது என்றும் மன்னர் ஆட்சி முடிந்து மக்களாட்சி வந்த பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கையில் தான் கோவில்கள் இருக்க வேண்டும் என்பது சரியானது என்றும் அரசாங்கம் தான் முழு பொறுப்போடு கோயில்களை நிர்வாகம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே இந்து சமய அறநிலைத்துறையை தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்ற கருத்து எள்ளளவும் நுழைவதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.