குடும்பம் என்றால் சண்டை சச்சரவு என எல்லாம் இருக்கத் தான் செய்யும். அதிலும் அடியார்கள் என்றால் இறைவன் ரொம்பவே சோதிப்பார். எத்தகைய சோதனை வந்தாலும் இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நமது கடனை செவ்வனே செய்து வர வேண்டும்.
அப்போது தான் வாழ்க்கை நிம்மதியாக நகரும். இன்றைய இனிய நாளான ஆங்கில புத்தாணடில் மார்கழி 17 (01.01.2023) மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.
இன்று மாணிக்கவாசகர் பாடிய பாடல் இது. செங்கண் அவன்பால் என்று தொடங்குகிறது.
இந்தப் பாடலில் விசைமுகனாக இருக்கக்கூடிய நான்முகனைப் பற்றியும், செங்கண்ணாக இருக்கக்கூடிய நான்முகனைப் பற்றியும், தேவர்களைப் பற்றியும் சொல்கிறார்.
என்னவென்றால் இவர்களிடத்தில் மறைத்து வைத்த திருவடியை இறைவன் நமக்கு எல்லாம் காட்டி நம் இல்லங்களில் எல்லாம் வலிய வந்து எழுந்தருளும் இறைவனை நாம் வணங்க வேண்டாமா…? வலிய வருவதனால் பெண்ணே நீ இறைவன் சாதாரணமானவர் என நினைத்து விடாதே.
தேவர்களுக்கும், திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் இறைவன் திருவுருவைக் காட்டாதவர். யாருக்கும் காட்டாதவர் நமக்காக இங்கு எழுந்தருளுகிறார். நமக்காக திருவடியைக் காட்ட வருகிறார் என்றால் இந்த மனிதகுலம் எவ்வளவு உயர்வானது? இது தெரியாமல் பெண்ணே நீ தூங்கிக் கொண்டு இருக்கிறாயே என மாணிக்கவாசகர் கேட்கிறார்.
திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் நடந்த விஷயம். அடிமுடி தேடிச் சென்றார்கள். அவர்களுக்குக் கிடைக்கவில்லை. படிக்காசுப்புலவர் நினைவு வந்து ஒரு பாடலைப் பாடுகிறார். இதில் அடடா இவ்வளவு நல்ல வாய்ப்பு கிடைத்தும் இந்த மாலும், அயனும் வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறிவிட்டார்களே…என்று கேட்டார்.
தில்லையில் ஆரூர் பெருமானுக்கு நண்பராக இருக்கக்கூடியவர் சுந்தர மூர்த்தி நாயனார். அவர் இறைவனை ஒவ்வொரு தலங்களாக சென்று இறைவனை வழிபடுகிறார். அப்போது முன்ஜென்ம வினைப்பயன் ஒன்றாகக்கூட்ட சங்கிலியாரை மணம் செய்கிறார்.
பரவையாருக்கு இது தெரிந்து அவர் மீது ரொம்ப கோபமாக இருக்கிறார். இறைவன் மீது நாட்டம் கொண்டு தனது ஆரூர் இறைவனைக் காண வேண்டும் என்ற ஆவலோடு திருவாரூருக்கு வருகின்றார். எம்பெருமானை மனதார தரிசித்துவிட்டு இல்லத்திற்கு வருகிறார்.
அங்கு அவரது மனைவி பரவையார் ரொம்ப கோபமா இருக்காங்க. என்னை விடுத்து நீங்கள் ஏன் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டீர்கள். இனி இந்த இல்லத்திற்கு வரக்கூடாது என்றார். அவரும் நேரா போய் சிவபெருமானிடம் முறையிடுகிறார்.
சுவாமி கீழவேதியராக வேடமிட்டு அவரோட இல்லத்திற்கு இரவில் செல்கிறார். அந்த அம்மா என்ன விஷயமா வந்திருக்கீங்கன்னு கேட்டார். இந்த மாதிரி தான் இருக்கு வாழ்க்கை. அது இப்படி எல்லாம் தான் இருக்கும் என்று சுந்தரமூர்த்தி நாயனாரை ஏற்றுக்கொள் என்று சொல்கிறார்.
இனி யாரும் இப்படி சொன்னா நான் உயிரை விட்டுவிடுவேன் என்று அவரிடம் சொல் என்றார். இனி பேசி பலனில்லை என்று சுந்தரமூர்த்தி நாயனாரிடம் விவரம் சொல்ல…நீயே என்னைக் காப்பாற்றா விட்டால் நான் உயிரை விட்டுவிடுவேன்…நீ நிஜ வேஷத்தில் போய் அவளிடம் விவரம் சொல் என்கிறார்.
இறைவன் தன் ரூபத்தில் வந்து அடியார்களுடைய வரலாற்றைச் சொல்லத் தான் சுந்தரன் இங்கு வந்து இருக்கிறான். அவருக்கு உதவி செய்யத் தான் நீங்க இருவரும் வந்திருக்கீங்க…என்றார். ஆகவே இருவரும் கோபித்துக் கொள்ளக்கூடாது என சமாதானம் செய்து சுந்தரமூர்த்தி நாயனாரை சேர்த்து வைக்கிறார்.
படிக்காசுப்புலவர் என்ன சொல்கிறார் என்றால் மாலும், அயனும் இறைவனைத் தரிசிக்க முடியவில்லை. ஒருவேளை அவர்கள் இருவரும் பரவையாரின் வீட்டு வாசலில் நிலைப்படிக் கதவாக இருவரும் இருந்திருக்க வேண்டும். மேல்படியாக பிரம்மாவும், கீழ்படியாக விஷ்ணுவும் இருந்து இருக்க வேண்டும். ஏன்னா சுவாமி 2 தடவை அந்த வீட்டுக்குள்ள நுழையும்போதும், வெளியே வரும்போதும் பார்த்திருக்கலாம் என்கிறார்.
வாய்ப்பு கிடைத்தும் இறைவனின் திருமுடியைப் பார்க்க முடியாமல் போனால் அன்று முதல் இன்று வரை வருந்துபவர்கள் உண்டு. அதைத் தான் மாணிக்கவாசகர் இங்கு பதிவு செய்கிறார்.
இறைவன் வீதி உலா வரும்போது வாசல் தெளித்துக் கோலம் போட்டு இறைவனுக்குத் திருக்கண் வைத்து வருபவர்களுக்கு ஏதாவது ஒரு பிரசாதம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் இறைவனை ரொம்ப மகிழ்ச்சியாக வரவேற்ற புண்ணிய பலன் நமக்குக் கிடைக்கும்.
ஆண்டாள் இன்றைய பாடலில் அம்பரமே தண்ணீரே சோறே என்று தொடங்குகிறார்.
நந்தகோபரைப் பற்றியும் அவரது தர்ம செயலைப் பற்றியும் வெகு அழகாக விவரிக்கிறார் ஆண்டாள். தர்ம குணம் படைத்த நந்த கோபரே கொஞ்சம் எழுந்து வாங்க. உங்க பையனையும் சேர்த்து எழுப்பிட்டு வாங்க. அந்த யசோதைத் தாயாரையும் சேர்த்து எழுப்பி விட்டு வாங்க.
அதோடு அந்த தர்ம சிந்தனையையும் இந்தப் பாடலில் அழகாக சொல்கிறார். ஓங்கி உலகளந்த உத்தமனைப் பற்றியும் சொல்கிறார். இந்த உலக மக்களுக்கு இறைவன் எல்லா அவதாரங்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகத் தான் தசாவதாரம் எடுத்தார்.
வாமன அவதாரம் முக்கியமானது. மகாபலி சக்கரவர்த்தி விண்ணுலகையும் ஆளணும்னு வேள்வியை ஆரம்பிக்கிறார். உலகமே வியக்கும் வகையில் இந்த வேள்வி செய்யப்படுகிறது. அவரது ஆணவத்தைக் களைந்து அவரைப் பக்தனாக மாற்ற வேண்டுமென தேவர்கள் பெருமாளிடம் முறையிடுகின்றனர். அவர் குள்ளமாக வாமன அவதாரம் எடுத்து யாகசாலையில் நுழைகிறார்.
அப்போது சுக்ராச்சாரியார் பார்த்து விட்டார். அவருக்கு இது பரந்தாமன் தான் என்று தெரிந்து விட்டது. இவரை நம்பக்கூடாது. மகாபலியிடம் அவர் ஒரு விஷயம் சொல்கிறார். இவருக்கு எது கேட்டாலும் கொடுத்து விடாதே…அது நமக்குப் பிரச்சனை என்கிறார். மகாபலி இவரிடம் என்ன வேண்டும் என்று கேட்கிறார்.
என் காலால் எனக்கு 3 அடி நிலம் தந்தால் போதும். அவரோ இது உமக்குப் போதுமா என்று கேட்கிறார். பெரியதாக ஏதாவது கேள் என்கிறார். எனக்கு இது போதும். இதை நானே அளந்து எடுத்துக் கொள்கிறேன் என்றார். சரி தந்தேன் என தனது கமண்டலத்தை சாய்ச்சார்.
சுக்ராச்சாரியார் இவன் சொல்லியும் கேட்க மாட்டேங்கிறானே என வண்டு உருவம் எடுத்துக் கமண்டலத்தை அடைத்துக் கொள்கிறார். இப்போது கையில் உள்ள தர்ப்பைப் புல்லை எடுத்து ஒரு குத்து குத்தினார். அவருக்கு ஒரு கண்ணு போச்சு. அந்தத் தண்ணீர் வாமனர் கையில் பட்டதும் வாமனர் வளர்ந்து கொண்டே போனார்.
விண்ணுலகை ஒரு அடியிலும், மண்ணுலகை ஒரு அடியாலும் அளந்து விட்டு 3வது அடியை எங்கே வைக்க எனக் கேட்கிறார். சுவாமி என் தலையில் வைங்க என ஆணவம் அழிந்தவராய் சொல்கிறார்.
அப்போது வாமனர் இந்திரனாக அடுத்த பிறவியில் நீ வருவாய் என வரம் தருகிறார். இந்தப் பாடலில் ஓங்கி உலகளந்த உத்தமனைக் காண வேண்டும். அதனால் நீங்க தான் முதல்ல எழுந்திருக்கணும் என ஆண்டாள் நந்தகோபரிடம் கோரிக்கை வைக்கிறாள்.