கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தீபம் தான். கார் என்றாலே மழை மேகம் என்று பொருள். இந்த மேகம் மழையாகப் பொழிந்து பூமியைக் குளிர்விக்கும் மாதமே கார்த்திகை.
ஐப்பசி, கார்த்திகையில் தான் அடை மழை பெய்யும். கார்த்திகை 1ல் துலா ஸ்நானத்தை காவேரி நதியில் நீராடினால் எல்லா நதிகளிலும் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும். ஐயப்ப சுவாமியை வழிபடுபவர்கள் மாலையிட்டு தங்களது விரதத்தைத் துவங்கும் மாதம் இதுதான்.
கார்;த்திகை மாதம் முழுவதுமே நாம் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அந்தக்காலத்தில் இதை விளக்கிடும் மாதம் என்று தான் சொல்வார்கள். தினமும் நிலைவாசலுக்கு முன் 2 அகல்விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
பரணி தீபம் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளுக்குப் பிறகு தாங்கள் சேர்த்துக் கொள்ளக்கூடிய புண்ணிய பலனுக்கான நாள். எமனை வழிபடக்கூடிய நாள் பரணி. எமனுக்கு நாம் பயப்படத் தேவையில்லை. ஒருவர் இறந்துவிட்டால் 30வது நாள் அவருக்கு இடக்கூடிய மோட்ச தீபமும், அதையும் தாண்டி ஒவ்வொரு உயிர்களுக்காக நாம இடக்கூடிய பரணி தீபமும் போதும். எமனுடைய அருள் நமக்குக் கிடைத்துவிடும். அதனால் இது எமதர்மனே சொல்லக்கூடிய வார்த்தை.
எமதர்மராஜாவை வணங்கி எமலோகத்திற்குச் செல்லும் பாதை நமக்கு வெளிச்சமாகவும், முன்னோர்கள் வாழ்வு மலர்ச்சியாகவும் இருக்கணும் என்றால் இந்த பரணி தீப நாளில் தான் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
மறுநாள் கார்த்திகை. முருகப்பெருமானை வளர்த்த 6 பெண்கள் கார்த்திகை பெண்கள். அந்தக்கார்த்திகைப் பெண்களுடன் வளர்ந்ததால் முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உள்ளது. சிவபெருமான் ஜோதி சொரூபமாக விளங்கிய நாள் இந்த கார்த்திகை திருநாள் தான்.
கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிறும் மிக விசேஷமான நாள் தான். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை, இல்லறத்தில் ரொம்ப பிரச்சனை, பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேரணும்னு நினைக்கிறவங்க கார்த்திகை ஞாயிறன்று உமா மகேஷ்வரனாகிய சிவபெருமான், பார்வதி தேவியை விரதமிருந்து வழிபட்டால் நிச்சயமாக பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர்வர்.
கார்த்திகை மாதம் வரக்கூடிய திங்கள்கிழமையைத் தான் சோமவாரம் என்கிறார்கள். இந்த நாளில் சங்காபிஷேகம் நடக்கும். இதைப் பார்ப்பவர்கள் பெரும் புண்ணியத்தைப் பெறுவர்.
பெருமாளுக்கும் இது விசேஷமான மாதம் தான். துளசி தான் பெருமாளுக்கு உகந்த பூஜை பொருள். அந்த துளசி தேவியை பெருமாள் மணந்த நாள் இந்த கார்த்திகை மாதத்தில் வரும் துவாதசி திருநாள் தான். வளர்பிறையில் வரும் இந்த நாளில் ஒரே ஒரு துளசி இலையை எடுத்து பெருமாளுக்கு நாம் அர்ச்சனை பண்ணினால் அஸ்வமேத யாகம் பண்ணிய பலன் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக இந்த மாதத்தில் விளக்கு தானம் செய்தால் அதன் பலன் அளப்பரியது. தோஷத்திலேயே பெரிய தோஷமான பிரம்மஹத்தி தோஷமே நீங்குமாம். அதுமட்டுமல்லாமல் செவ்வாய் தோஷம், ராகு தோஷனம் என எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் அடியோடு நீங்குமாம்.
கோவிலுக்கு புதிதாக மண்விளக்குகள் கூட வாங்கிக் கொடுக்கலாம். வசதி உள்ளவர்கள் பித்தளை விளக்குகள் வாங்கிக் கொடுக்கலாம். இல்லாத பக்தர்களுக்குக் கொடுக்கலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாதம் 17.11.2022 (வியாழக்கிழமை) பிறக்கிறது.