முருகப்பெருமானின் புகழ் பாடும் பாடல்களில் பல இருந்தாலும் கந்த சஷ்டி கவசம் அதி விசேஷமானது.
பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை இயற்றியது மிகவும் உணர்ச்சிப் பூர்வமானது. ஒரு சமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அதற்காக எவ்வளவோ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை.
என்ன செய்வது என்று யோசித்தார். ஆனால் அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதனால் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டார். ஒரு கட்டத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து விடலாம் என்ற நிலைக்குப் போய் விட்டார்.
திருச்செந்தூர் வந்தார். அங்கு அப்போது கந்த சஷ்டி விழா ஆரம்பித்து இருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் முருக பக்தர் என்பதால் அந்த விழாவைக் கண்டு மனமாறினார்.
திருவிழா முடிந்ததும் தற்கொலை முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார். முருகப்பெருமானின் சஷ்டி விரதத்தை இருக்கத் தொடங்கினார். முதல்நாள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு கோவில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.
அப்போது அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்புரிந்தார். அதுமட்டுமல்லாமல் தனக்காகக் கந்த சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார். அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகளின் மனதில் பக்தி வெள்ளம் பிரவாகம் எடுத்து ஓடத் தொடங்கியது.
சஷ்டியை நோக்க சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…என்று தொடங்க பாடலை எழுதி முடித்தார். இது திருச்செந்தூர் திருத்தலத்திற்கான பாடல். அதற்கடுத்த 5 நாள்களுக்கு முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களையும் இயற்றி முடித்தார்.
6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடித்ததும் அவரை வாட்டி வந்த வயிற்று வலி காணாமல் போனது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை பாலதேவராய சுவாமிகள் அறிந்ததும் பக்தி பரவசம் அடைந்தார்.
அழகன் முருகனை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். சஷ்டிகவசத்திற்கு தங்கள் மனதைப் பறிகொடுக்காதவர்கள் யாரும் இல்லை. அந்தளவிற்கு சக்தி மிக்க வரிகள் கொண்டது தான் இந்த சஷ்டி கவசம்.
ஒருவர் கந்த சஷ்டி கவசத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால் அவர்களை நோய்கள் அண்டாது. மனம் வாடாது. குறைவின்றி பதினாறும் பெற்று பல்லாண்டு வாழலாம். நவக்கிரகங்களும் நன்மை அளிப்பர். குழந்தைப் பாக்கியம் கிட்டும்.