அனைவரும் தனக்கு துன்பம் வரும் காலத்தில் கோவில் குளமென ஏறி இறங்குவர். எல்லோரும் கடவுளிடம் ஒரு ஒப்பந்த அடிப்படையில் தான் பேரம் பேசுவார்கள். எனக்கு நீ அதைக்கொடு. உனக்கு நான் இதைச் செய்கிறேன் என்று.
சிலர் மட்டுமே பொதுநலத்திற்காகவும் கடவுளிடம் வேண்டுவர். கடவுளை நாம் எவ்வாறு பாவித்து வணங்க வேண்டும்? சரணாகதி என்றால் என்ன? எதை வேண்டினால் நமக்கு நல்லது. எதை எதை எல்லாம் வேண்டக்கூடாது. இதைப்பற்றி இப்போது பார்ப்போம்.
இறைவன் நமக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். நாம் கடவுளிடம் வேண்டுவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளோம். ஆனால் வேண்டுவதில் இதைத் தான் வேண்ட வேண்டும். இதை வேண்டக்கூடாது என்றும் வேண்டுவார்கள். நான் நல்லா இருக்கணும்னு வேண்டலாம். ஆனால் என் எதிராளி நல்லாவே இருக்கக்கூடாது என வேண்டக்கூடாது.
சிவபெருமானே தன்னை அழித்தவரை எல்லாரையும் ஆபரணமாக அணிந்துள்ளார். முருகனே தனது பகைவனைக் கூட பக்கத்திலேயே வைத்துள்ளார். அதனால் இன்னொருவர் கெட்டுப்போகணும்னு வேண்டாதீங்க. அது பகைவனாக இருந்தாலும் சரி.
எனக்கு வேலை கிடைத்தால் வெள்ளியில் வேல் எடுத்து வைக்கிறேன் என்றும் வேண்டுவாங்க. நீ எனக்கு தந்தாய் என்றால் நான் உனக்கு இது தருவேன் என்பதில் ஆணவம் கலந்துருக்கு. நீ தந்தால் தான் நான் தருவேன். இது தவறான முறையா என்றால் ஆம். இதை கடவுளிடம் பணிவாகவும், அன்பாகவும் கேட்க வேண்டும்.

கடவுளே எனக்கு உன்னை விட்டால் வேறு வழியில்லை. கடவுளிடம் முழுவதுமாக சரணாகதி அடைந்து விட வேண்டும். என் குடும்பம் குழந்தைக் குட்டிகள் நோய் நொடியில்லாமல் இருக்கணும். அதனால் எனக்கு வேலை கொடுன்னு பணிவோடு வேண்டணும்.
கோவில்ல போய் செய்வினை வைப்பது மிகவும் தவறு. இதில் என்ன ஒரு கெடுதல் என்றால் ஒருவேளை நமக்கு கெடுதல் யாரும் செய்யவில்லை என்றால் அது நமக்கே திரும்ப வந்து ஆபத்தாக முடியும்.
வராகிகிட்ட போய் நான் எந்தத் தப்பும் பண்ணல. நான் நிரபராதி. என்னை அவங்க ஏமாற்றிட்டாங்க. என்னை அவங்க வஞ்சிட்டாங்க. அவங்களுக்கு உண்டான பலன நீ கொடுன்னு வேண்டலாம். கடவுளிடம் இந்த மாதிரி வேண்டனும்னு கூட தேவையில்லை.
அவனவன் செய்த வினையை அவனவன் தான் அனுபவிக்க வேண்டும். நிலத்தில் நெல்லைப் போட்டால் நெல்லு தான் விளையும். வினை விதைத்தவன் வினை அறுக்கத் தான் செய்யணும். எதை விதைக்கிறோமோ அதை ஒருநாள் அனுபவித்தே ஆக வேண்டும்.
நாமே நமது பிரச்சனைகளை அதிகப்படுத்தக்கூடாது. படபடவென வரக்கூடாது. அவன் குடும்பத்தை நான் ஏதாவது செய்யணும். என்னை அவன் இப்படி பண்ணிட்டான். அப்படி பண்ணிட்டான்னு பதற்றப்பட்டு தேவையில்லாமல் எதுவும் செய்யக்கூடாது. அதனால் தெய்வத்திடம் கண்ணீர்விட்டு முறையிடுங்க. அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கிடுவாரு.

தப்பு செய்யும்போது கடவுளைத் துணைக்கு அழைக்காதீங்க. பரீட்சையில் போய் பிட் அடிக்கும் மாணவன் கடவுளே நான் மாட்டிக்கிடக்கூடாதுன்னு வேண்டுவது தவறு. குழந்தைகள் வீட்டில் திருடும்போது கடவுளே நான் அப்பா அம்மாகிட்ட மாட்டிக்கிடக்கூடாதுன்னு வேண்டுவது எவ்வளவு தவறோ அது போல தான் இதுவும். சில நேரங்களில் நாமே கடவுளிடம் இப்படி வேண்டுவோம்.
இது வளர்ந்து பெரிய தவறு செய்யும்போது மாட்டிக்குவோம். அதன்பிறகு நீ என்னை இப்படி மாட்டி விட்டுட்டீயேன்னு கடவுளைக் கோபப்படக்கூடாது. அதனால் அந்த விஷயத்தை நாம செய்யவேக் கூடாது. எந்த விஷயத்தை நாம கடவுளைக் கூப்பிடாம செய்யக்கூடாதுன்னு நினைக்கிறோமோ அந்த மாதிரியான விஷயத்தை நாம செய்யவேக் கூடாது என்பதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்றால் நாம் நல்ல செயல்களுக்கு மட்டுமே கடவுளைத் துணைக்கு அழைப்பதால் தீய செயல்களை எதுவுமே செய்ய மாட்டோம். நல்லவர்களாக மாறிவிடுவோம். எப்பவுமே கடவுளிடம் பிரார்த்தனை பண்ணும்போது உலகம், இயற்கை, விவசாயம் நல்லாருக்கணும்னு ஒரு பொது நலத்துடனும் வேண்டலாம். இது ரொம்ப ரொம்ப நல்லது.
கடவுளிடம் இப்படி வேண்டும்போது அவரே நம்மைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவார். நமக்கு மனமிறங்கி வேண்டிய பலன்களைத் தருவார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



