நமது உடலில் உள்ள 11 துவாரங்களில் ஏதாவது ஒன்றின் வழியாக உயிர் வெளியேறும். இதை சித்தர்கள் கூறும் ரகசியம். ஒருவர் செய்த பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும்.
நம் உடலில் உள்ள தசவாயுக்கள் என்பது பத்து காற்றுகள் உள்ளன. பிராணன், அபாணன், உதானன், வியாணன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் ஆகியவை தான் தசவாயுக்கள்.
இவற்றில் பிராணன் என்பதே உயிர்க்காற்று. இது தான் பத்து வாயுக்களாகப் பிரிகிறது. அபானன் என்பது மலக்காற்று. உதானன் என்பது ஒலிக்காற்று. இது செரிமானத்திற்கு உதவி செய்யும். சத்தம் எழுப்ப உதவும் காற்று.
வியானன் என்பது தொழிற்காற்று. இது சரீரம் முழுவதும் வியாபித்து இருக்கும். காற்றையும், உணவையும் உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. சமானன் என்பது நிரவு காற்று.
உடல் முழுவதையும் சமப்படுத்துகிறது. செரிமானப்பணியைத் துரிதப்படுத்துகிறது. நாகன் என்பது ஏப்பக்காற்று. வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை பிரச்சனையை நீக்க உதவுகிறது. கூர்மன் என்பது இமைக்காற்று. விழிகளுக்குள் தூசிகள் மற்றும் வெளிப்பொருள்கள் உள்ளே புகாதவாறு இமையை மூடச்செய்கிறது.
கிருகன் என்பது தும்மல் காற்று. மூச்சுப்பகுதிக்குள், தொண்டைப்பகுதிக்குள் ஏதாவது புகுந்துவிட்டால் தும்மல் போட்டு அதை வெளியேற்றி விடும். தேவதத்தன் என்பது கொட்டாவிக்காற்று.
உயிர்காற்று குறைவாக இருக்கும் போது கொட்டாவி விட்டு அதிக பிராணவாயுவை உள்ளிழுத்து களைப்பை நீக்குகிறது. உடலை விட்டு பிராணன் வாயு நீங்கியதும் உடல் சடலமாகி விடுகிறது. உடல் சடலமானாலும் கூட உடலில் இந்த தனஞ்செயன் காற்று இருக்கும்.
இது உடலில் தங்கியிருக்கும் வரை உடலானது வீங்காது. நாற்றம் எடுக்காது. உடலின் தன்மையும் மாறாமல் எடை கூடாமல் இருக்கும். இறுதியாக இந்தப் பிண உடலை விட்டு வெளியேறுவது தான் தனஞ்செயன். தனஞ்செயன் என்பது வீங்கற் காற்று. இது இறந்த உடலை வீங்க வைப்பதும் அழுக வைப்பதுமான வேலையைச் செய்கிறது.
உடலை வீங்கச் செய்து நாற்றமடிக்கச் செய்வது நுரை நீர் வரச்செய்தல் போன்ற வேலைகளையும் செய்யும். இதன் வேலை முடியும் வரை நமது சடலத்தில் தங்கியிருக்கும். தலையின் உச்சிக்குழி வெடித்து இந்த தனஞ்செயன் காற்று வெளியேறும். அப்போது உடலில் ஒரு துடிப்பைக் கொடுத்து விட்டுத் தான் வெளியேறும்.
அதிக பழி பாவங்கள் செய்தோருக்கு மலவாசல் வழியாக உயிர் பிரியும். சற்று குறைவாகப் பாவம் செய்தோருக்கு நீர்வாயில் வழி உயிர் பிரியும். பாவம் நிறைய, புண்ணியம் குறைய செய்தோருக்கு நாபி வழியே உயிர் பிரியும். பாவம், புண்ணியம் சமமாக செய்தோருக்கு வாய் வழியாக உயிர் பிரியும்.
அதிக பாவம் செய்யாத உயிர்கள் இடது, வலது நாசிகள் வழியாக உயிர் பிரியும். சிறதளவு பாவம் செய்தோருக்கு இடது, வலது செவி வழியே உயிர் பிரியும். மிகவும் புண்ணியம் செய்தோருக்கு இடது, வலது கண்கள் வழியே உயிர் பிரியும்.