ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய் அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தாம் தான் மறைமுகமாக ஆதரவு வழங்கி வந்தது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் மீது உலக நாடுகளில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, லண்டனில் இந்திய சமூகத்தினர் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு ஒன்று கூடி, இந்தியக் கொடியும், பதாகைகளும் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“பாரத் மாதா கி ஜெய்” மற்றும் “பாகிஸ்தான் முர்தாபாத்” என்ற முழக்கங்களுடன் அந்தக் கூட்டம் முழங்கியது. பலர் “I am Hindu” என்று எழுதிய பதாகைகளை ஏந்தி, தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இதில் அனைத்து வயதினரும் பங்கேற்று, உணர்ச்சி வலிமையுடன் ஒன்றிணைந்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார், “பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு தளம் அமைத்து விட்டது. அதன் விளைவாக 26 பேர் உயிரிழந்தனர். இதற்காகவே நாங்கள் இங்கு போராட்டம் நடத்துகிறோம்,” என்றார்.
மற்றொரு போராட்டக்காரர், “இந்திய சமூகத்தினர் இதற்காக மிகவும் வருந்துகிறோம். பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனா கூட இந்த விஷயத்தில் அமைதி காக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த ஒரு அறிக்கையும் வெளிவரவில்லை. மேலும் டிரம்ப் வரிவிதிப்பினால் சிக்கலில் இருக்கும் சீனாவுக்கு இப்போதைக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இந்த தாக்குதால் ஒரு பக்கம் உலக நாடுகளின் வெறுப்பை பாகிஸ்தான் சம்பாதித்தது என்றால் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவும் குவிந்து வருகிறது.