2021-க்கு பிறகு முதல்முறையாக, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கியை டெல்லியில் சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை முட்டாக்கி மீதான பயண தடைகளை தற்காலிகமாக நீக்கியதை தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இது, காபூலுடன் இந்தியா மீண்டும் இணக்கமான உறவை மேற்கொள்ளும் ஒரு முக்கியமான வியூகமாக பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு இப்போது நடப்பதற்கு பின்னால் முக்கியமான பிராந்திய அரசியல் காரணங்கள் உள்ளன. எதிரெதிர் துருவங்களாக இருந்த இந்தியாவும் தலிபானும், தற்போது சில பொதுவான வெளி அழுத்தங்களை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சமீபத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2021-இல் அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற பிறகும், காபூலில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு பாக்ராம் விமானப்படையை தளத்தை வாஷிங்டனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தலிபானிடம் கோரினார். தலிபான் இந்த கோரிக்கையை நிராகரித்தது.
ரஷ்யா தலைமையிலான மாஸ்கோ வடிவ பேச்சுவார்த்தையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், ரஷ்யா மற்றும் 4 மத்திய ஆசிய நாடுகள் ஆகியவற்றுடன் ஆப்கானிஸ்தானும் பங்கேற்றது. இதில், பாக்ராம் விமானப்படையை தளத்தை மீண்டும் இராணுவ பயன்பாட்டிற்காக கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இந்தியா தனது தூதரகத்தை மூடியிருந்தாலும், மனிதாபிமான உதவிகள் மற்றும் தொழில்நுட்ப தொடர்புகளை தொடர்ந்தது. அணைகள், பள்ளிகள் என ஆப்கானிஸ்தானில் இந்தியா அதிக முதலீடு செய்துள்ளது. எனினும், இந்திய அரசு இன்னும் தலிபான் அரசை சட்டபூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
இந்தியாவை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தான் முயற்சிக்காது என்ற உறுதியை பெறுவது இந்தியாவின் முதன்மையான நோக்கம். முட்டாக்கி ஏற்கெனவே இது குறித்து வாய்மொழி உறுதி அளித்துள்ளார்.
காஷ்மீரில் முன்பு நடந்த தாக்குதல்கள் குறித்து காபூல் வெளிப்படுத்திய விமர்சனங்கள், தலிபான் – பாகிஸ்தான் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி, இந்தியா பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தவும், தன் செல்வாக்கை அதிகரிக்கவும் முயல்கிறது.
பாகிஸ்தானை தவிர்த்து, ஈரானில் உள்ள சபஹார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானை இந்திய சந்தைகளுடன் இணைப்பதற்கான வர்த்தக மற்றும் போக்குவரத்து வழிகளை மேம்படுத்த இந்தியா வாய்ப்புகளை பார்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மாணவர்கள், அகதிகள் மற்றும் அறிஞர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்த உறவை பலப்படுத்துவதும் இந்த சந்திப்பின் நோக்கத்தில் அடங்கும்.
தலிபானை பொறுத்தவரை, இந்த சந்திப்பு சர்வதேச சட்ட அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு வழியாகும். இந்தியா ஒரு முக்கியமான பிராந்திய சக்தி என்பதால், டெல்லியின் அங்கீகாரம் சர்வதேச அளவில் கூடுதல் மதிப்பை பெற்றுத் தரும்.
எனினும், இந்த உறவில் அபாயங்களும் நிறைந்துள்ளன. மனித உரிமைகள், பெண்களின் உரிமைகள், சிறுபான்மையினர் பாதுகாப்பு ஆகியவை குறித்து தலிபான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ற கவலை நீடிக்கிறது.
இந்த சந்திப்பின் விளைவாக, இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வரைபடம், வர்த்தக கட்டமைப்புகள் தொடர்பான ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறுதிமொழிகள் மற்றும் இந்தியா வழங்கும் கவனமான மேம்பாட்டு உதவிகள் ஆகியவை வெளிப்படலாம்.
சுருக்கமாகச் சொன்னால், இந்தியா முழுமையாக தலிபானைத் நம்பவில்லை, மாறாக ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தில் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு நகர்வை மேற்கொண்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
