இந்தியாவின் அண்டை நாடான வியட்நாமில் புதிய தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அந்த நாடு உலகளவில் மிகப்பெரிய பணக்கார நாடாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், ஒரு கிராம் தங்கம் வாங்குவதே ஏழை மற்றும் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகியுள்ளது. இந்நிலையில், வியட்நாமில் தற்போது பத்து டன் அளவிலான தங்கமும், 16 டன் அளவிலான வெள்ளியும் உள்ள சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கண்டுபிடிப்பு அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து வியட்நாம் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் சுமார் 500 தங்க சுரங்கங்கள் உள்ளதாகவும், அவை பெரும்பாலும் வடக்கு மலைப் பகுதிகள் மற்றும் மத்திய மாநிலங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வில் 12 இடங்களில் புதிய தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 டன் தங்கம் மற்றும் 16 டன் வெள்ளி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 500 இடங்களில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், தற்போது 30 இடங்களில் விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாகவும், 300 டன் தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் வியட்நாம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிராம் தங்கம் சுமார் 9,000 ரூபாய் என விற்பனை ஆகி வருகின்ற நிலையில், 10 டன் தங்கம் எத்தனை கோடி என நீங்களே கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள். இதைத் தவிர இன்னும் ஏராளமான தங்கம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதால், வியட்நாம் என்ற சிறிய நாடு ஒரு வல்லரசு நாடாக மாறினாலும் அதில் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது.