மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை பதித்துள்ளதாக எழுந்துள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 36 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த குறுகிய கடல் பகுதியில், உலகின் 20 முதல் 30 சதவீத எரிசக்தி விநியோகம் நடைபெறுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே இந்த பகுதியில் ஒருவித முற்றுகையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரான் தனது கடல் பகுதியில் கண்ணிவெடிகளை தூவியிருப்பதாக கூறுவது வெறும் எச்சரிக்கையா அல்லது உண்மையான போர் நடவடிக்கையா என்ற விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஈரான் கடற்படை “நாங்கள் எங்கே கண்ணிவெடி வைத்தோம் என்று எங்களுக்கே தெரியாது” என்று கூறுவது, அப்பகுதியில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கடல்சார் கண்ணிவெடி போர் என்பது மிகக்குறைந்த செலவில் எதிரிக்கு மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கக்கூடிய ஒரு சமச்சீரற்ற போர் முறையாகும். வரலாற்று ரீதியாக உலக போர்கள் முதல் 1971 இந்திய-பாகிஸ்தான் போர் வரை இத்தகைய கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈரானை பொறுத்தவரை சுமார் 3,000 முதல் 5,000 கண்ணிவெடிகளை தனது கையிருப்பில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றை பதிப்பதற்கு பெரிய போர்க்கப்பல்கள் தேவையில்லை; சாதாரண மீன்பிடிப் படகுகள் அல்லது ஹெலிகாப்டர்கள் மூலமே இந்தப் பணியை செய்ய முடியும். ஈரானின் இத்தகைய அறிவிப்பு என்பது ஒரு தகவல் போர் போன்றது; அதாவது உண்மையிலேயே கண்ணிவெடிகள் இருக்கிறதோ இல்லையோ, அந்த ஒரு பயம் மட்டுமே எதிரி நாட்டு வணிக கப்பல்களை அந்தப் பக்கம் வராமல் தடுத்துவிடும்.
இந்த கண்ணிவெடிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. கடலின் மேற்பரப்பில் மிதக்கும் கண்ணிவெடிகள் , கடலின் அடிப்பகுதியில் அமர்ந்திருக்கும் கண்ணிவெடிகள் மற்றும் கப்பல்களின் காந்தப்புலம் அல்லது ஒலியை உணர்ந்து வெடிக்கும் திறன் கொண்ட நவீன கண்ணிவெடிகள் என இவை பலவிதம். ஹார்முஸ் ஜலசந்தி சுமார் 45 மீட்டர் ஆழம் மட்டுமே கொண்டது என்பதால், அங்கு நிலவும் பலமான நீரோட்டங்கள் இந்த கண்ணிவெடிகளை ஓரிடத்தில் இருக்கவிடாமல் அடித்து செல்ல வாய்ப்புள்ளது. இதனால், ஈரான் கடற்படை கூறுவது போல அவை எங்கு இருக்கின்றன என்று சரியாக கணிக்க முடியாத நிலை ஏற்படலாம். இது கடலில் பயணம் செய்யும் அனைத்து கப்பல்களுக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத எமனாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்கக் கடற்படை இந்த பகுதியில் இந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு ‘அலி பர்க்’ ரக அழிப்பு கப்பல்கள் மற்றும் நவீன சோனார் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், ஆளில்லா நீருக்கடியில் இயங்கும் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தக் கண்ணிவெடிகளை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முடிவாக, ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் இந்த நெருக்கடி உலக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கக்கூடும். ஒருவேளை போர் நிறுத்தம் அல்லது சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும், இந்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு பல நாடுகளின் கூட்டு முயற்சி தேவைப்படும். ஈரான் பொறுப்புள்ள ஒரு நாடாக நடந்து கொள்ள வேண்டுமானால், தான் பதித்த கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் முன்வர வேண்டும். இந்த பகுதியில் அமைதி திரும்புவதும், கப்பல் போக்குவரத்து தடையின்றி நடப்பதும் உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்புக்கு இன்றியமையாதது. அதுவரை, ஹார்முஸ் ஜலசந்தி என்பது சர்வதேச கடல் சார் பாதுகாப்பிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே நீடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
