அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு இறக்குமதி வரி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் அதிரடியாக ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் செமிகண்டக்டர் சிப்கள் உள்ளிட்ட முக்கிய மின்னணு சாதனங்களுக்கு விலக்கு அளித்துள்ளார். டிரம்பின் இந்த முடிவால் ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க குடிமக்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவின் அறிக்கையின் படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு சாதனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 125% வரி, மற்றும் பிற நாடுகளுக்கான 10% அடிப்படை வரி சில பொருட்களுக்கு மட்டும் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு பெறும் முக்கிய பொருட்கள்:
ஸ்மார்ட்போன்கள்
லேப்டாப்புகள்
ஹார்ட் டிரைவ்கள்
கணினி சிப்கள்
இந்த விலக்கு காரணமாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்து விற்க முடியும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செமிகண்டக்டர் மானியூஃபாக்சரிங் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பயன்படும் உற்பத்தி இயந்திரங்களும் இந்த விலக்கில் அடங்கும்.
ஆனால் அதே நேரத்தில் இந்த விலக்குகள் குறுகிய காலத்துக்கு மட்டும் இருக்கலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது டிரம்ப் நிறுத்தி வைத்த 90 நாட்களுக்கு மட்டும் இருக்கலாம் என்றும் அதன்பின் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்படலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்த விலக்குகள் தொழில்துறைக்கு தற்காலிக நிம்மதியை அளிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், வருங்காலத்தில் இது ஒரு திட்டமிட்ட நிரந்தர வரிவிதிப்பாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.