அமெரிக்காவின் விவசாய துறையில் தற்போது நிலவிவரும் கடுமையான சவால்கள் குறிப்பாக, அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள புதிய சுங்க வரிகள், காலாவதியான விவசாய மசோதா மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்கள் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை பெரிதும் பாதித்து வருவதாக அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும், விவசாயத்திற்குத் தேவையான ஒரு முக்கிய ரசாயனமான ‘பொட்டாஷ்’ விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகள், எவ்வாறு ஒட்டுமொத்த உணவு உற்பத்தி சங்கிலியையும் பாதிக்கக்கூடும் என்பதையும் சுட்டி காட்டி வருகின்றனர்.
அமெரிக்காவின் அயோவா மாநிலத்திலுள்ள டி மொயின் நகரில் நடைபெற்ற விவசாய கண்காட்சியான “அயோவா ஏ எக்ஸ்போ” (Iowa A Expo)வில், விவசாயிகளின் கவலைகள் வெளிப்படையாக தெரியவந்தன. அதிபர் ட்ரம்ப்பின் புதிய சுங்க வரிகள், உலகளாவிய வர்த்தக கூட்டாளிகளுடன் அமெரிக்கா கொண்டிருந்த ஏற்றுமதி உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சீனாவை போன்ற பெரிய சந்தைகள், அமெரிக்க விவசாய பொருட்களை வாங்குவதை நிறுத்தியதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த தானியங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இது, நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, விவசாய நடவடிக்கைகளை மிகவும் கடினமாக்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான “விவசாய மசோதா” காலாவதியாகிவிட்டதால், விவசாயிகளுக்கான அமெரிக்க அரசின் நிதி உதவி தடைபட்டுள்ளது. இந்த மசோதா இரண்டு முறை நீட்டிக்கப்பட்டாலும், ட்ரம்ப் தனது புதிய மசோதா நிறைவேறும் வரை எந்த நிதி உதவியும் கிடைக்காது என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். இதனால், விவசாயிகள் தங்கள் கடன்களை அடைக்கவும், விவசாயத்திற்கான செலவுகளை சமாளிக்கவும் சிரமப்படுகின்றனர்.
அமெரிக்காவில் விவசாய உற்பத்தியில், ஒரு ரகசியமான ஆனால் மிகவும் முக்கியமான மூலப்பொருள் உள்ளது. அதுதான் பொட்டாஷ். இது பொட்டாசியம் ரசாயனத்தை அளிக்கும் ஒரு கனிமம். பயிர்களின் வளர்ச்சி, நீர் மேலாண்மை மற்றும் நோய் தடுப்புக்கு இது மிகவும் அவசியம். அமெரிக்கா பயன்படுத்தும் பொட்டாஷில் பெரும்பகுதி கனடாவிலிருந்து, குறிப்பாக சஸ்காட்செவான் மாகாணத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வர்த்தகப்போர் காரணமாக இந்த விநியோகம் தடைபட்டால், அது பயிர் விளைச்சலை பெருமளவில் பாதிக்கும்.
பொட்டாஷ் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி, பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கும் திறனைப் பாதிக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு பொட்டாஷ் உற்பத்தி, தேவையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பூர்த்தி செய்கிறது. புதிய சுரங்கங்களை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் மற்றும் பில்லியன் கணக்கான டாலர்கள் தேவைப்படும். எனவே, இந்த வர்த்தக கட்டுப்பாடுகள், விவசாயத்தை மட்டுமல்லாமல், முழு நாட்டின் உணவு பாதுகாப்பையும் அச்சுறுத்துகின்றன.
விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, மற்றும் வர்த்தக தடைகள் ஆகியவை விவசாயிகளின் லாபத்தை குறைக்கின்றன. இது, விவசாயம் சார்ந்த கடன்களை அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த திவால் வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
விவசாயிகளின் வருமானம் குறைந்தால், அது கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். குறைந்த வருமானம், கடைகளில் விற்பனை குறைவு, மற்றும் பள்ளி நிதி குறைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது, கிராமப்புற சமூகங்களின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பண்ணைகள் திவால் ஆகும்போது, அவை பெரிய நிறுவனங்களால் வாங்கப்படுகின்றன. இது, விவசாய நிலங்களின் அமைப்பை மாற்றுகிறது. இந்த சவால்களை சமாளிக்க, பல தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன: விவசாயிகளுக்கு நீண்ட கால திட்டமிடலுக்கு உதவும் வகையில், நிலையான மற்றும் தெளிவான வர்த்தக கொள்கைகள் தேவை. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒரே சந்தையில் சார்ந்திராமல், பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். துல்லியமான விவசாய தொழில்நுட்பங்கள் மேம்பட்ட விதை வகைகள், மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆகியவை விவசாய உற்பத்தியை மேம்படுத்த உதவும்.
நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பிரச்சினைகளை மோதல்கள் இல்லாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இது, உணவு விநியோக சங்கிலியின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும். விவசாயம், வெறும் ஒரு தொழிலாக இல்லாமல், ஒரு தேசத்தின் அடிப்படை பலமாக உள்ளது. அரசியல் முடிவுகள் மற்றும் கொள்கைகள், விவசாயிகளின் வாழ்க்கை, சமூகத்தின் நலன் மற்றும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கின்றன. தொழில்நுட்பம் இல்லையென்றால் கூட ஒரு நாட்டின் மக்கள் வாழ்ந்துவிடுவார்கள், ஆனால் சோறு இல்லாமல் எப்படி வாழ முடியும். இன்னொரு சோமாலியாவாக அமெரிக்கா மாறும் முன் அமெரிக்க அரசு தங்களுடைய தவறை உணர்ந்து மீண்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
